ஞானசார தேரரைக் கைது செய்ய மேல்முறையீட்டு நீதிமன்றம் பிடியாணை உத்தரவு
கலகொடஅத்தே ஞானசார தேரரை உடனடியாக கைது செய்து, எதிர்வரும் அக்டோபர் 1ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (29) பிடியாணை பிறப்பித்துள்ளது.
ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டிருந்த ஜனாதிபதி பொதுமன்னிப்பு இரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை அமுல்படுத்துமாறு சட்டமா அதிபர் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
நீதிபதிகள் மாயாதுன்னே கொரயா மற்றும் லக்மாலி கருணாரத்ன ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இந்த மனு பரிசீலிக்கப்பட்டது.
வழக்கு விசாரணையின் போது ஞானசார தேரர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவர் உடல்நலக்குறைவு காரணமாக ஓய்வெடுத்து வருவதாக அவரது சட்டத்தரணி அறிவித்தார். எனினும், இது குற்றவியல் வழக்காக இருப்பதால் பிடியாணை பிறப்பிக்க வேண்டுமென சட்டமா அதிபர் சார்பிலான சட்டத்தரணி கோரிக்கை விடுத்தார்.
இதனை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், கலகொடஅத்தே ஞானசார தேரரை கைது செய்து அக்டோபர் 1ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டு பிடியாணை பிறப்பித்துள்ளது.

