முதலில் அனுமதி… கடைசி நேரத்தில் விசா ரத்து! 115 வெளிநாட்டினரைத் தடுத்த இந்தியா… யார் அவர்கள்?

முதலில் அனுமதி… கடைசி நேரத்தில் விசா ரத்து! 115 வெளிநாட்டினரைத் தடுத்த இந்தியா… யார் அவர்கள்?

நவம்பர் 13, 14 தேதிகளில் ஹைதராபாத்தில் காங்கிரஸ் ஏற்பாடு செய்த ‘பாரத் உச்சி மாநாடு’ நடைபெற்றது. இதில் பங்கேற்க 70-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து வெளிநாட்டுப் பிரதிநிதிகள் அழைக்கப்பட்டிருந்தனர்.

ஆனால், வெளியுறவு அமைச்சகத்தின் அனுமதி பெற்ற 315 பேச்சாளர்களில் 115 பேருக்கு இந்தியா வர அனுமதி மறுக்கப்பட்டதாக காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் குற்றம்சாட்டினார்.

நார்வே பத்திரிகையாளர் ஹெல்லே லிங் ஸ்வெண்ட்சன் முக்கியமான உதாரணம். இவர் மே மாதம் ஒஸ்லோவில் பிரதமர் மோடியிடம் பத்திரிகையாளர்களின் கேள்விகளை ஏன் எதிர்கொள்வதில்லை என்று கேள்வி எழுப்பியவர்.

ஹைதராபாத் மாநாட்டில் பத்திரிகைச் சுதந்திரம் குறித்த விவாதத்தில் பங்கேற்க அழைக்கப்பட்டிருந்தார்.

ஆனால், விமான நிலையத்திற்குப் புறப்படுவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு, இந்தியத் தூதரகம் அவரைத் தொடர்புகொண்டு பயணம் செய்ய முடியாது எனத் தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார்.

மாநாட்டு ஏற்பாட்டாளர்களின் கூற்றுப்படி, சில வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கு வெளியுறவு அமைச்சகத்தின் அரசியல் அனுமதியும் விசாவும் ஏற்கெனவே வழங்கப்பட்டிருந்தன.

ஆனால், பின்னர் உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் சில அனுமதிகள் திரும்பப் பெறப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுக்கு உள்துறை அமைச்சகம் இதுவரை விரிவான விளக்கம் அளிக்கவில்லை.

வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், விசா வழங்குவதும் மறுப்பதும் ஒவ்வொரு நாட்டின் இறையாண்மை சார்ந்த முடிவு என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், முதலில் அனுமதி வழங்கிவிட்டு பின்னர் ஏன் ரத்து செய்யப்பட்டது என்ற கேள்விக்கு அவர் நேரடியாகப் பதிலளிக்கவில்லை.

காங்கிரஸ், மோடி அரசை விமர்சிப்பவர்களின் குரலை ஒடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டுகிறது.

மறுபுறம், பாஜக தலைவர்கள் இந்த மாநாடு இந்தியாவுக்கு எதிரான கருத்துகளைக் கொண்டவர்களுக்கு மேடையாக அமைந்துள்ளதாக விமர்சித்துள்ளனர்.

எனவே, இது வெறும் விசா விவகாரம் அல்ல; எதிர்க்கட்சியின் சர்வதேசத் தொடர்புகள், தேசியப் பாதுகாப்பு, கருத்துச் சுதந்திரம் ஆகிய மூன்றையும் சுற்றியுள்ள அரசியல் மோதலாக மாறியுள்ளது.

Recommended For You

About the Author: admin