யாழில் பிரபல கல்லூரி கட்டட நிர்மாண ஒப்பந்தம் இடையில் முறிக்கப்பட்டது ஏன்?

S.R.Karan

தற்பொழுது யாழ்.இந்து மகளிர் கல்லூரியில் கட்டப்பட்டுவரும் ஒரு நிர்மாண வேலை மிகவும் துரிதமான வேகத்தில் நடைபெற்று வருவதாகப் பரவலாகப் பேசப்பட்டுவரும் வேளையில் இவ்வொப்பந்தமானது திடீரென முடிவுறுத்தப்பட்டதாக அறிய நேரிட்டுள்ளது.

இக்கட்டடத்தை தங்கள் நிறுவனம் நிர்மாணித்து வந்ததாக அறிந்து அதன் காரணத்தை அறிய உங்களை நாடி வந்துள்ளோம்.

(பொறியியலாளர் Sivalingam Ruthiralingam)

இவ் வேலையானது திடீரென முடிவுறுத்தப்பட்டமைக்குக் காரணமென்ன எனக் கூறமுடியுமா?

ஆரம்பத்திலிருந்தே சிற்சில தடங்களுக்கு மத்தியில் நாம் வேலையினை செவ்வனே ஒப்பேற்றிக் கொண்டுவரும் வேளையில் நாவூறு பட்ட விதமாக ஒப்பந்தத்திற்கு அப்பாற்பட்டவிதமாக சில அறிவுறுத்தல்களை நிபந்தனையாக உள்ளடக்க வேலையினை மேற்பார்வை செய்யும் அரச நிறுவனம் முயன்று நாமும் அதனை ஒப்பந்தத்தின் மாற்றமாக ஏற்றுக்கொண்டு செய்ய முற்படுகையில் தடுக்கப்பட்டோம்.

மேலும், நிர்மாணிப்பதற்காக எமக்கு சமர்ப்பிக்கப்பட்ட வரைபடங்கள் யாவும் நிர்மாணத்திற்கு சிறிதளவும் ஏற்புடையதல்ல என நாமே திருப்பி அனுப்ப வேண்டிய சூழ்நிலையில் அவற்றினை ஜீரணித்து ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில் அவ்வரச நிறுவனம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

எமக்கு வேலை வழங்கிய திணைக்களமோ இச்சூழ்நிலையை எவ்விதம் கையாள்வது என்ற ஆளுமைத்திறனற்றதாகக் காணப்படுகிறது.

இப்படிப்பட்ட நிலையில் இக்கட்ட வேலைகள் யாவும் நகர அபிவிருத்தி சபையின் அங்கீகாரமின்றி கட்டப்பட்டு வருவதால் இதனை இடைநிறுத்தி அங்கீகாரம் பெற்றபின்னர் தொடருமாறு வேலை வழங்குநர் பணிக்கப்பட்டுள்ளார்.

இதனை வேலைகள் ஆரம்பிப்பதற்கு முன்னராகவே நாம் அறிவித்திருந்தோம். ஆனால், யாவும் செவிடன் காதில் ஊதிய சங்காயிற்றே!

இச்சந்தர்ப்பத்தை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திப் பழம் நழுவிப் பாலில் விழுந்தாற்போல வேலை வழங்குநர் இதன் பின்விளைவுகள் பற்றிய அறிவுத் திறனற்ற விதத்தில் திடீரென எமது உடன்படிக்கையினை முடிவுறுத்தியுள்ளார்.அறிவில் ஆதவர்களல்லவா??

தாங்கள் ஓர் அனுபவம் பெற்ற பொறியியலாளர் என்ற முறையில் இதற்கு பரிகாரம் தான் என்ன ?

ஓப்பந்தக்காரர் யாவரையும் கீழ் நோக்கிப் பார்க்கும் எமது சமுதாய மட்டத்தில் எம்மையும் அப்பார்வையுடன் நோக்கும் பொழுது தங்கள் கேள்வி மிகுந்த மனமகிழ்வினைத் தருகிறது.

எமது உடன்படிக்கையின் பிரகாரம் வேலை வழங்குநர் மிகவும் சக்தி படைத்தவர். ஏற்படும் பிரச்சினைகளைத் தூசியாகத் தட்டிவிட்டு தமது கடப்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல ஒப்பந்த ரீதியாக சகல அதிகாரங்களுமுண்டு.

ஆனால், இங்கு அவ்விதம் முன்னெடுத்துச் செல்ல திறனற்றவர்களாகத் தென்படுகிறார்கள் போலும்.

வேலையினை மேற்பார்வை செய்யும் அரச நிறுவனம் தம்மிடமுள்ள குறைகளை மனதார ஏற்று எம்முடன் ஒத்துழைத்து எதுவித பொறிகளும் வைக்கும் நோக்கமின்றி இந் நிர்மாணத்தினை ஒப்பேற்ற வருவார்களேயானால் யாவும் சௌக்கியமே!!

இவற்றிற்கு மேலாக வேலையினை மேற்பார்வை செய்யும் நிறுவனத் தினால் தத்தம் ஒப்பந்த வேலைகள் பாதிக்கப்பட்டு அவற்றினை எடுத்துக்கூறப் பயப்பட்டு தயங்கிக் கொண்டு இருக்கும் ஒப்பந்தக்காரர்கள் அவற்றினை முன்னெடுத்துச் சென்று உரிய அழுத்தங்களை கொடுக்கும் பட்சத்தில் விசுவாமித்திரர் அகலிகையினை ஏறெடுத்துப் பார்க்க விரும்பலாமல்லவா?

வேறு எந்த முறையில் எந்த மாற்றுவழியில் இப்பிரச்சினையைத் தீர்த்து வைக்கலாம்?

நான் பொல்லைக் கொடுத்து அடிவாங்கப்போகிறனோ தெரியவில்லை. எனினும் இதோ சில முன்மொழிவுகள்…………

01) உடன்படிக்கையின் பிரகாரம் வேலைகளில் ஏற்படும் சகல குறைபாடுகளுக்கும் ஒப்பந்தக்காரரே பொறுப்பு எனக் கூறப்படுகையில் அவற்றிற்கு லாயக்கில்லாதவர்கள் அவற்றிற்குள் தலையிட்டு தமது பிரசன்னத்தை வெளிப்படுத்த முயல்வது ஏற்புடையதல்ல.

எனினும், வேலை வழங்குநர் சார்பாக வேலைக்கு எதுவித தடங்கல்களும் இல்லாமல் ஒப்பந்தக்காரர் தவறில்லாமல் செய்வதினை உறுதிப் படுத்தலாம்.

02) காலநீடிப்பு தேவையானாலும் எம்மினால் கோரல்கள் ஏற்படின் அவற்றினையும் நாம் தந்துவிட்டு போகிறாம் என்ற ‘வழித் தேங்காயை பிள்ளையாருக்கு உடைக்கும்” நிலையிலிருந்து விலகி அரச நிதியை வீண்விரயமாக்குவதை தடுக்க வேலையினை மேற்பார்வை செய்யும் அரச நிறுவனம் முன்வரவேண்டும்.

03) அரச ஊழியர்கள் பயப்படும் யுரனவை நிறுவனத்திற்கு ஒருவித உந்து சக்தியை வழங்க முயற்சி செய்தால் சகல பிரச்சினைகளும் மாயமாய் மறைந்துவிடலாம்.அவை தோன்றவே வாய்ப்பு இல்லாமல் போய்விடும்.

04)கையொப்பமிடுவதற்கு அதிகாரம் பெற்ற அரச தலைமைத்துவம் தத்தம் துறைகளில் அறிவில் ஆதவர்களாக இருந்தாலும் ஒப்பந்த முகாமைத்துவத்தில் அறிவில்லாதவர்களாக தோற்றமளிப்பதினைத் தவிர்க்க முன்வர வேண்டும்.

அப்படியானால் உங்களது ஒப்பந்தம் முடிவுறுத்தப்பட்டமையை தாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லையா?

எப்படி ஏற்றுக் கொள்ளலாம்? முடிவுறுத்தலுக்கு எடுத்தியம்பப்பட்ட காரணம் எதுவெனில் வேலை மேற்பார்வையாளரின் அறிவுறுத்தலுக்கு மதிப்பு கொடுப்பதில்லையாம் என்ற ஒரேயொரு காரணத்தைக்கூறி நாம் வழங்கும் சேவைகளையே முடிவுறுத்தியுள்ளார்கள். ஓப்பந்தம் முடிவுறுத்தப்படவில்லை. அதற்கு மதிப்பு கொடுப்பது எமது கடப்பாடு என்றபடியால் நாம் அதனை ஏற்றுக் கொண்டு நடுவர் தீர்ப்பாயத்தை நாடியுள்ளோம்.

தாங்கள் ஏன் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை?

ஏற்கனவே மன்னாரில் அடம்பன் மகா வித்தியாலயக் கட்டட வேலையின் போது வேலை வழங்குநராகிய கல்வித் திணைக்களம் தாமே ஒப்பந்தத்தினை மீறிய நிலையில் ஒப்பந்தக்காரரை முடிவுறுத்த முற்பட்டமை ஒப்பந்தத்தவறு என அறியத்தரப்பட்டும் தன்னைத் திருத்திக் கொள்ளாமல் அதேவேலை மேற்பார்வை செய்யும் நிறுவனத்தின் ஆலோசனையின் பேரில் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறுவது தவறல்லவா?

அதேநேரத்தில் தமது தவறான கட்டட வடிவமைப்பினால் நகர அபிவிருத்தி சபை கல்வித் திணைக்களத்தினை அனுமதி எடுத்த பின்னர் கட்டட வேலையினைச் செய்யும்படி கட்டளையிட்டபடியால் தாம் செய்த தவற்றினைத் திருத்துவதற்கு காலம் தேவைப்பட்டபடியால் மிகவும் துரித வேகத்துடன் கட்டப்பட்டுவந்த நிர்மாணத்தை ஏதோ ஒரு குருட்டு நியாயம் கற்பித்து எம்மைப் பகடைக் காயாக்கி எமது வேலையினை முடிவுறுத்திவிட்டார்கள்.

பலே கில்லாடி தான் கல்வித் திணைக்களம்.!!!

தாங்கள் குருட்டு நியாயம் என்று கூறுகிறீர்களே. அதனை நியாயப்படுத்தமுடியுமா?

வேலைக்குத் தேவையான வரைபடங்களை வேலை மேற்பார்வையாளர் நான்கு முறை வழங்கியிருந்தும் அவற்றினை முழுவதுமாக செல்லுபடியாகாது என ஒரு ஒப்பந்தக்காரரே நிராகரிக்கும் போது மௌனம் சாதித்த வேளையிலும்
ஆரம்ப காலத்திலிருந்தே வேலை மேற்பார்வையாளர் ஒப்பந்தக்காரரை முடிவுறுத்தும்படி வற்புறுத்தியும் அவற்றில் எதுவித நியாயமுமில்லை என்ற நிலைப்பாட்டில் இருந்த வேளையிலும்
வேலை வழங்குநரின் நிலைப்பாடு என்னவென்பதினை சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை!

இவ்வாறான நிலையில் வேலை மேற்பார்வையாளரின் அங்கீகாரமின்றி ஒரு குறிக்கப்பட்ட கொங்கிறீட் வேலைகளினை செய்ய தடை போடுவது அவ்வேலைகளுக்கு பொறுப்புக் கூற லாயக்கே இல்லாத வேலை மேற்பார்வையாளர் எவ்விதம் முன்வரலாம்???

ஆனால், அங்கீகாரமின்றி கொங்கிறீட் வேலை செய்ததாக ஒருதலைப்பட்சமான முடிவெடுத்து அதனை நியாயப்படுத்தி துரித முன்னேற்றம் அடைந்த ஒரு வேலைக்கு தடை விதிக்க முற்பட்டமை குருட்டு நியாயத்தால் என்றால் மிகையாகாது அல்லவா?

அப்படியானால் இக்கட்டடம் பாதியில் நிற்க வேண்டியது தானா?

நாம் வேலை முடிவுறுத்தலுக்கு முன்னராகவே நடுவர் தீர்ப்பாயத்தினை நாடியுள்ளமையால் அத்தீர்ப்பு கிடைக்கப்பெறும் வரைக்கும் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும் தான். தீர்ப்பு எமக்குச் சாதகமானால் வேலையினை தொடர்ந்து கொண்டு செல்லலாம்.

இப்படியான செயல்பாட்டுக்கு முடிவேயில்லையா?

எப்படி இருக்கும்? அரச ஊழியர்களில் உயர் பதவி வகிப்பவர்களுக்கு அவர்கள் தவறிழைத்தால் ஒன்றில் இடமாற்றம் அல்லது பதவி உயர்வுடன் ஒரு வெளிநாட்டு சுற்றுலா. ஆகவே, இவை தொடர்கதையாகவே இருக்கும் மட்டும் முடிவேயில்லை. 

(பொறியியலாளர் Sivalingam Ruthiralingam)

 

 

Recommended For You

About the Author: S.R.KARAN