இந்தியாவுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை விரிவுபடுத்தத் திட்டம் – ஜனாதிபதி

இந்தியாவுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை விரிவுபடுத்தத் திட்டம் – ஜனாதிபதி அறிவிப்பு!

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தற்போதைய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை மேலும் விரிவுபடுத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

 

இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக அமைச்சரவையினால் அதிகாரிகள் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

 

இலங்கையின் சர்வதேச வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், ஏற்கனவே நடைமுறையிலுள்ள வர்த்தக ஒப்பந்தங்களைப் புதுப்பிப்பதற்கும், ஏனைய நாடுகளுடன் புதிய ஒப்பந்தங்களை ஏற்படுத்துவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

இதற்கமைய, சீனாவுடன் புதிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தமொன்றை ஏற்படுத்துவது தொடர்பிலும் ஆராயப்பட்டு வருகின்றது.

 

அத்துடன், பிராந்திய விரிவான பொருளாதாரப் பங்காளித்துவ ஒப்பந்தத்தில் (RCEP) இணைவதற்கான விண்ணப்பமும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

 

ஐக்கிய அரபு இராச்சியத்துடன் விரிவான பொருளாதாரப் பங்காளித்துவ ஒப்பந்தங்களை ஏற்படுத்துவதற்கும் அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

 

இதேவேளை, ஐரோப்பிய சந்தையுடனான இலங்கையின் வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ஐரோப்பிய ஒன்றியத்தின் 3,430 மில்லியன் ரூபாய் நிதியுதவியுடன், இலங்கை – ஐரோப்பிய ஒன்றிய நிலையான வர்த்தக மற்றும் பொருளாதார ஒருங்கிணைப்புத் திட்டம் 2027ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

 

ஏற்றுமதிப் போட்டித்தன்மையை மேம்படுத்துதல், ஏற்றுமதிப் பொருட்களைப் பல்வகைப்படுத்துதல் மற்றும் நிலையான உற்பத்தியை ஊக்குவித்தல் ஆகியன இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.

 

மேலும், சாத்தியக்கூறு ஆய்வுகளின் அடிப்படையில் ஏனைய நாடுகளுடனும் புதிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை ஏற்படுத்துவது குறித்து ஆராயப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin