வெளிநாடு வாழ் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு
வாழ்க்கைத் துணை, பிள்ளைகளுக்கு கட்டணமின்றி இரட்டை குடியுரிமை!
2027-ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் கீழ், வெளிநாடு வாழ் இலங்கையர்களின் வாழ்க்கைத் துணை, பிள்ளைகள் மற்றும் மூன்றாம் தலைமுறை சந்ததியினருக்கு எவ்விதக் கட்டணமுமின்றி இரட்டை குடியுரிமை வழங்க அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.
இலங்கைக்கும் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை சமூகத்தினருக்கும் இடையிலான பிணைப்பை வலுப்படுத்தும் நோக்கில், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது வரவு-செலவுத் திட்ட உரையில் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதன் கீழ், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களின் இரண்டாம் மற்றும் மூன்றாம் தலைமுறை சந்ததியினரை இலக்காகக் கொண்டு “உலகளாவிய இலங்கை மரபு வழி குடிமக்கள்” எனும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் இரட்டை குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் இலங்கை நாட்டவரின் குடும்பத்தினரும் மூன்றாம் தலைமுறையினரும் கட்டண விலக்குப் பெறத் தகுதியுடையவர்களாவர்.
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் மற்றும் அவர்களது சந்ததியினரின் அறிவு, திறன்கள் மற்றும் ஆற்றல்களை நாட்டின் எதிர்கால அபிவிருத்தியுடன் இணைப்பதே இந்த முன்னெடுப்பின் பிரதான நோக்கமாகும்.
மேலும், வெளிநாடுகளில் வளரும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த இளைய தலைமுறையினருக்கும், அவர்களின் பூர்வீக தாயகத்திற்கும் இடையிலான உறவை வலுப்படுத்தவும் இது வழிவகுக்கும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் இலங்கையர்களுடனான ஈடுபாட்டை ஊக்குவிப்பதற்காக 2027-ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள பல்வேறு முன்னெடுப்புகளில் இது முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
இந்தத் திட்டத்திற்கான தகுதிகள் மற்றும் நடைமுறைப்படுத்தும் விதிமுறைகள் குறித்த மேலதிக விவரங்கள் அரசாங்கத்தால் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

