போலி இலக்க தகட்டுடன் நோர்வூட் நகரில் அமைந்துள்ள மஸ்கெலிய பல்நோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் பெட்ரோல் நிரப்ப சென்றிருந்த ஒருவரை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.
இந்த நபர் போலி இலக்க தகட்டை மோட்டார் சைக்கிளில் பொருத்தி எரிபொருளை நிரப்ப சென்றுள்ளார். குறித்த எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் இன்றைய தினம் 3 ஆயிரத்து 300 லீட்டர் பெட்ரோல் விநியோகிக்கப்படவிருந்தது.
வாகனத்தின் இறுதி இலக்கமான 0 முதல் 3 வரையான இலக்கங்களை கொண்டுள்ள வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படவிருந்தது.
கம்பளை பிரதேசத்தை சேர்ந்த 27 வயதான சந்தேக நபர் எடுத்து வந்த மோட்டார் சைக்கிளின் இலக்க தகடுக்கு பதிலாக போலி இலக்க தகட்டை பொருத்தி எரிபொருளை பெற்றுக்கொள்ள சென்றிருந்த போது, இலக்க தகட்டில் ஒரு ஆணி கழன்றிருப்பது குறித்து சந்தேகமடைந்த பொலிஸார், மோட்டார் சைக்கிளின் ஆவணங்கள் மற்றும் காப்புறுதி பத்திரங்களை பரிசோதித்த போது, இலக்க தகடு போலியானது என தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
போலி இலக்க தகட்டை பொருத்தி வாகனத்தை ஒட்டிய குற்றச்சாட்டில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த இலக்க தகட்டை பயன்படுத்தி வேறு ஏதேனும் குற்றங்கள் செய்துள்ளாரா என்பதை அறிய விசாரணை நடத்தி வருவதாகவும் சந்தேக நபரை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளதாகவும் நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்போலி இலக்க தகடுகளை பயன்படுத்தி எரிபொருள் நிரப்புதல் மற்றும் போலி இலக்க தகட்டுடன் வாகனத்தை பயன்படுத்தல் என்பது தண்டனைக்குரிய குற்றம் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.