கொழும்பு நகரில் 112 புதிய மெட்ரோ பஸ்கள்: ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆரம்பித்து வைப்பு!
கொழும்பு நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, பாதுகாப்பான பொதுப் போக்குவரத்தை உறுதி செய்யும் நோக்கில் மேல் மாகாணத்தின் 7 முக்கிய வழித்தடங்களில் 112 புதிய மெட்ரோ பஸ்கள் இன்று (29) முதல் சேவையில் இணைக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் தலங்கம மெட்ரோ பஸ் டிப்போவில் இதற்கான உத்தியோகபூர்வ நிகழ்வு நடைபெற்றது.
2025ஆம் ஆண்டு வரவு–செலவுத் திட்டத்தின் கீழ் ரூ. 3,000 மில்லியன் நிதியொதுக்கீட்டில் கொள்வனவு செய்யப்பட்ட 104 தாழ்தள பஸ்களும், ஜப்பான் அரசாங்கத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட 8 பஸ்களுமே இவ்வாறு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.
பொதுமக்கள் வசதியாகவும் விரைவாகவும் பயணிக்க வழிவகுக்கும் இத்திட்டம், இலங்கையின் பொதுப் போக்குவரத்து துறையில் ஒரு புதிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

