தேசிய அடையாள அட்டைகளுக்காக 50 இலட்சம் அட்டைகளை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி
முன்கூட்டியே அச்சிடப்பட்ட பொலிகார்பனேட் அட்டைகளை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்திற்குத் தேவையான குறித்த அட்டைகளைக் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்க, கடந்த 2025ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முதற்கட்ட அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, சர்வதேச போட்டி நடைமுறையின் கீழ் விலைமனுக்கள் கோரப்பட்ட நிலையில், எட்டு நிறுவனங்கள் தமது விலைமனுக்களைச் சமர்ப்பித்திருந்தன.
விலைமனுக்கள் மதிப்பீடு செய்யப்பட்டதன் பின்னர், உயர்மட்ட கொள்வனவுக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், குறித்த ஒப்பந்தத்தை ஜேர்மனியைச் சேர்ந்த M/s Muhlbauer ID Services GmbH நிறுவனத்திற்கு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, டிஜிட்டல் பொருளாதார அமைச்சராக முன்வைத்த அமைச்சரவைப் பத்திரத்தின் அடிப்படையில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான ஒப்பந்தத்தின் பெறுமதி 4.93 மில்லியன் யூரோக்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

