கொழும்பு உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு கடும் மின்னல் தாக்கம் தொடர்பான எச்சரிக்கை – பொதுமக்களுக்கு அவதான அறிவுறுத்தல்!
கொழும்பு, கம்பஹா, களுத்துறை உள்ளிட்ட நாட்டின் பல மாவட்டங்களில் கடும் மின்னல் தாக்கத்துடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அம்பர் நிற எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இயற்கை அனர்த்தங்கள் தொடர்பான முன்னெச்சரிக்கை மையத்தினால் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பு, இன்று (07) பிற்பகல் 1 மணி முதல் நாளை (08) அதிகாலை 1 மணி வரை அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, ஹம்பாந்தோட்டை, மாத்தறை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி, கேகாலை, குருநாகல், புத்தளம், மன்னார், மொனராகலை மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களின் அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அனுராதபுரம், அம்பாறை, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளுக்கும் இந்த எச்சரிக்கை பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடும் மின்னல் தாக்கம் காரணமாக திறந்தவெளிகளில் இருப்பவர்களுக்கு உயிரிழப்பு அல்லது பாரிய காயங்கள் ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதாகவும், இடியுடன் கூடிய மழையினால் போக்குவரத்து, மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளும் பாதிக்கப்படக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
மேலும், இடியுடன் கூடிய மழையின்போது பலத்த காற்று மற்றும் கனமழையும் பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இடியுடன் கூடிய மழை ஏற்படும் சந்தர்ப்பங்களில் பாதுகாப்பான கட்டிடங்களுக்குள் அல்லது மூடப்பட்ட வாகனங்களுக்குள் தஞ்சமடையுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
திறந்தவெளிகள், தனித்த மரங்கள், கடற்கரைகள், ஏரிகள் மற்றும் ஏனைய நீர்நிலைகளுக்கு அருகில் இருப்பதைத் தவிர்க்குமாறும், மின்னல் தாக்கம் ஏற்படும் வேளைகளில் மின் உபகரணங்கள் மற்றும் கம்பி இணைப்புகளைக் கொண்ட மின் சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், இடியுடன் கூடிய மழை நெருங்கும் போது வெளிப்புற விளையாட்டு நிகழ்வுகள், கட்டுமானப் பணிகள் உள்ளிட்ட திறந்தவெளிச் செயற்பாடுகளை ஒத்திவைக்குமாறும் கோரப்பட்டுள்ளது.
இந்த வானிலை எச்சரிக்கை தொடர்பான அடுத்த அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

