உலக வங்கியின் நிதியுதவியுடன் சுகாதார நிறுவனங்களுக்கு 10 புதிய டொயோட்டா டபுள் கெப் வாகனங்கள் வழங்கி வைப்பு!
இலங்கையின் ஆரம்ப சுகாதார சேவைகளை வலுப்படுத்தும் நோக்கில், உலக வங்கியின் நிதியுதவியுடன் பிராந்திய சுகாதார நிறுவனங்களுக்கு 10 புதிய டொயோட்டா டபுள் கெப் வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
உலக வங்கியின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் ஆரம்ப சுகாதாரக் கட்டமைப்பை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் இந்த வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, நேற்று (06) வெள்ளிக்கிழமை சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவினால் குறித்த வாகனங்கள் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.
கிராமிய மற்றும் பிராந்திய மட்டங்களில் ஆரம்ப சுகாதார சேவைகளை மேம்படுத்துவதுடன், தொற்றா நோய்களைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் திட்டங்கள், மனநலச் சேவைகளை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக இந்த வாகனங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.
இதன்படி, நுவரெலியா, புத்தளம், மொனராகலை, பொலன்னறுவை, களுத்துறை, மாத்தறை, இரத்தினபுரி, திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களின் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகங்களுக்கு தலா ஒரு வாகனம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், களுத்துறையில் அமைந்துள்ள தேசிய சுகாதார விஞ்ஞான நிறுவனத்திற்கும் ஒரு வாகனம் வழங்கப்பட்டுள்ளது.
கிராமிய மற்றும் பிராந்திய சமூகங்களுக்கான ஆரம்ப சுகாதார சேவைகளின் வினைத்திறன் மற்றும் அணுகலை மேம்படுத்துவதே இந்த உலக வங்கியின் நிதியுதவித் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இந்த நிகழ்வில் சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் அனில் ஜாசிங்க, ஆரம்ப சுகாதாரக் கட்டமைப்பை மேம்படுத்தும் திட்டத்தின் பணிப்பாளர் டாக்டர் லலித் லியனகே உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள் மற்றும் டொயோட்டா லங்கா நிறுவனப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

