கழிவுநீரை வடிகாலில் வெளியேற்றிய உணவகத்திற்கு எதிராக நல்லூர் பிரதேச சபை அதிரடி நடவடிக்கை
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதி, கல்வியங்காட்டு சந்திப் பகுதியில் வெள்ளநீர் வடிகாலுக்குள் கழிவுநீரை வெளியேற்றியதாகக் கண்டறியப்பட்ட அசைவ உணவகத்திற்கு எதிராக நல்லூர் பிரதேச சபை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
குறித்த பகுதியில் சுகாதார சீர்கேடு தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து, நல்லூர் பிரதேச சபை தவிசாளர் மயூரன் தலைமையிலான குழுவினர் நேற்று சம்பவ இடத்திற்குச் சென்று நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
கடும் வெப்பமான காலநிலை நிலவியிருந்த போதிலும், அப்பகுதியிலுள்ள ஏனைய வடிகால்கள் நீரின்றி காணப்பட்ட நிலையில், குறித்த உணவகத்திற்கு முன்பாக அமைந்திருந்த வடிகாலில் மாத்திரம் அதிகளவில் நீர் தேங்கியிருந்தமை அதிகாரிகளின் கவனத்திற்கு வந்தது.
இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், குறித்த உணவகத்திலிருந்து வெளியேறும் கழிவுநீரை மறைமுகமாக வெள்ளநீர் வடிகாலுக்குள் செலுத்துவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது.
இதனையடுத்து, கழிவுநீர் வடிகாலுக்குள் செல்லும் ஏற்பாடு உடனடியாக அகற்றப்பட்டதுடன், குறித்த உணவகத்தை மூடுமாறும் நல்லூர் பிரதேச சபையினால் பணிப்புரை விடுக்கப்பட்டது.
மேலும், இனிவரும் காலங்களில் கழிவுநீரை வெள்ளநீர் வடிகாலுக்குள் வெளியேற்றக்கூடாது என கடுமையான அறிவுறுத்தல் வழங்கப்பட்டதுடன், கழிவுநீரால் சுகாதார சீர்கேட்டுக்கு உள்ளான வடிகால் பகுதியை உணவக நிர்வாகமே முழுமையாக சுத்தம் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பிரதேச மக்களின் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்திற்கொண்டு நல்லூர் பிரதேச சபையினால் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து, குறித்த உணவகம் அதன் உரிமையாளரினால் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் சுகாதாரத்திற்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கழிவுநீரை பொது வடிகால்கள் மற்றும் வீதியோரங்களில் வெளியேற்றுவோர் மீது எதிர்காலத்திலும் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.

