“மருந்தகங்கள் ஊடாக போதை மாத்திரைகள் விற்பனை?” – பிரதி அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்
இலங்கையிலுள்ள மருந்தகங்கள் ஊடாகவும், மருந்தகங்களின் பின்னணியிலும் போதை மாத்திரைகள் மற்றும் ஏனைய தடைசெய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாக பொதுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் 11வது ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியிலும் இவ்வாறான போதை மாத்திரைப் பயன்பாடு அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் தரப்பிலிருந்து பல முறைப்பாடுகள் அதிகாரிகளுக்குக் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சில மருந்தகங்கள் இவ்வாறான மாத்திரைகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்களாகவே அறியப்பட்டுள்ளதாகவும், சில நபர்கள் சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரங்களைச் செய்வதற்கு மருந்தகங்களை ஒரு போர்வையாகப் பயன்படுத்தி வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மேலும், ஆயுர்வேத நிலையங்கள் என்ற பெயரில் இயங்கும் சில நிறுவனங்களில் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகள் விற்பனை செய்யப்படுவதாகவும் பிரதி அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மருந்தக உரிமையாளர்களுடன் கலந்துரையாடல்களை நடத்தி, இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான மாவட்ட மட்டத்திலான திட்டமொன்றை ஆரம்பிக்க பொதுப் பாதுகாப்பு அமைச்சு திட்டமிட்டுள்ளதாக வட்டகல தெரிவித்துள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுகள் முழு மருந்தகத் துறைக்கும் பொருந்தாது என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க மருந்தக உரிமையாளர்களுடன் இணைந்து அதிகாரிகள் செயற்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

