நெடுந்தீவு போக்குவரத்துச் சீர்கேடு: மாவிலித் துறைமுகத்தில் சுற்றுலாத்துறை அமைப்பினர் கவனயீர்ப்புப் போராட்டம்!!!!!
நெடுந்தீவுக்கான பயணிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் போக்குவரத்து சேவையில் தொடர்ச்சியாக நிலவும் பிரச்சினைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, உள்ளூர் சுற்றுலாத்துறை சார் அமைப்பினர் நேற்று (19/08/2026) காலை நெடுந்தீவு மாவிலித் துறைமுகத்தில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்
குறிகாட்டுவான் துறைமுகத்தில் பயணிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவதுடன், நெடுந்தீவுக்கு அவர்களை அழைத்துச் செல்வதற்கான படகு சேவைகள் உரிய முறையில் திட்டமிடப்படுவதில்லை என சுட்டிக்காட்டப்பட்டது.
பாடசாலை விடுமுறைக் காலம் என்பதால் நெடுந்தீவுக்கு வருகை தரும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
இந்நிலையிலும் அடிப்படைப் போக்குவரத்து வசதிகள் சீரற்றுக் காணப்படுவது உள்ளூர் சுற்றுலாத்துறையைப் பெரிதும் பாதிக்கிறது.
குறிகாட்டுவான் துறைமுகத்தில் நேற்று காலையிலிருந்து சுமார் 60 சுற்றுலாப் பயணிகள் நெடுந்தீவு செல்வதற்காக நீண்ட நேரம் காத்திருந்ததாகவும், அவர்களுக்குத் தேவையான மாற்றுப் படகு சேவைகள் முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்படாத நிலையில் அரச படகு தாமதமாகவே வந்து சேர்ந்ததாகவும் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர்.
நெடுந்தீவின் சுற்றுலாத்துறையைப் பாதுகாக்கும் வகையிலும், உள்ளூர்வாசிகள் மற்றும் வெளிநாட்டுப் பயணிகளின் சிரமங்களைக் களையும் வகையிலும் தொடர்ச்சியான, ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் நம்பகமான படகு போக்குவரத்து சேவையை உறுதிப்படுத்த உரிய அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டுத் தீர்வு காண வேண்டும் எனப் போராட்டத்தில் ஈடுபட்ட உள்ளூர் சேவை வழங்குநர்கள் வலியுறுத்தியுள்ளனர்

