6 கொள்கலன்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2,236 பொருட்கள் சிக்கின – கடத்தல்காரர்களுக்கு கடும் எச்சரிக்கை
குவைத் அரசாங்கம் தனது குடிமக்களுக்கு மானிய விலையில் வழங்கும் உணவுப் பொருட்களை சட்டவிரோதமாக இலங்கைக்கு ஏற்றுமதி செய்யத் தயாராக இருந்த நிலையில், குவைத் சுங்கத்துறை அதிகாரிகள் அவற்றை அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர்.
ஷுவைக் துறைமுகத்தில் ஏற்றுமதி நடவடிக்கைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது மேற்கொள்ளப்பட்ட சோதனையிலேயே இந்தச் சட்டவிரோத நடவடிக்கை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
40 அடி நீளமான 6 கொள்கலன்களில் பல்வேறு கப்பல் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களுடன் தொடர்புடைய சரக்குகளுக்கு இடையே பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக குவைத் சுங்கத்துறை தெரிவித்துள்ளது.
📦 பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள்:
* 211 டின் பால் பவுடர்
* 349 மூட்டை மாவு
* 435 புட்டிகள் தலால் எண்ணெய்
* 9 டின் தலால் காய்கறி நெய்
* 38 மூட்டை பருப்பு
* 787 பாக்கெட்டுகள் மக்கரோனி
* 49 மூட்டை அரிசி
* 35 மூட்டை சர்க்கரை
* 323 பாக்கெட்டுகள் தக்காளி பேஸ்ட்
மொத்தம் – 2,236 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்தப் பொருட்களை இலங்கைக்கு அனுப்ப முயற்சித்ததாகக் கூறப்படும் நபர்களுக்கு எதிராக குவைத் சுங்கச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் கொள்கலன்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
⚠️ படிப்பினையாக அமையும் சம்பவம்
மக்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் பொருட்களை சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்வது, அந்த நாட்டின் அரசாங்க நிதியையும் பொதுமக்களின் உரிமையையும் பாதிக்கும் நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
இதுபோன்ற சட்டவிரோத முயற்சிகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என குவைத் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
மேலும், மானிய உணவுப் பொருட்களின் சட்டவிரோத கடத்தலைத் தடுக்கும் வகையில் தரைவழி, கடல்வழி மற்றும் வான்வழி நுழைவுப் பாதைகளில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் எனவும் குவைத் சுங்கத்துறை தெரிவித்துள்ளது.
“சட்டவிரோதமாக கிடைக்கும் இலாபம், இறுதியில் கடுமையான சட்ட நடவடிக்கைக்கே வழிவகுக்கும்” – இந்தச் சம்பவம் கடத்தலில் ஈடுபடுவோருக்கு மற்றுமொரு முக்கிய எச்சரிக்கையாக அமைந்துள்ளது

