கொழும்பில் உள்ள 24 அடுக்குமாடிக் குடியிருப்புகளின் பாதுகாப்பை பலப்படுத்த விசேட நடவடிக்கை!
கொழும்பு நகரைச் சுற்றியுள்ள 24 அடுக்குமாடிக் குடியிருப்புத் தொகுதிகளின் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கைப் பேணுவது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று கொழும்பு பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் உத்தரவு மற்றும் ஆலோசனைக்கு அமைவாக, கொழும்பு பிராந்தியத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிஷாந்த டி சொய்சா தலைமையில் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது.
நகர்ப்புற மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் இயங்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிக்கும் மக்களின் உயிர் மற்றும் சொத்துக்களைப் பாதுகாப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
கூட்டத்தில் கலந்துகொண்ட நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் பொறியியலாளர் தமித் திசாநாயக்க முன்வைத்த கோரிக்கைகளுக்கு அமைய, உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்துமாறு சுற்றியுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு பணிப்புரை விடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சில குடியிருப்புப் பகுதிகளைச் சுற்றி இடம்பெறும் போதைப்பொருள் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தவும், அதனால் பொதுச் சொத்துக்களுக்கு ஏற்படும் சேதங்களைத் தடுக்கவும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இதற்காக குடியிருப்புகளைச் சுற்றி புதிய பொலிஸ் காவலரண்களை நிறுவுவதற்கும், தற்போதுள்ள காவலரண்களைப் புனரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டுவருவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், தொடர்ச்சியான பொலிஸ் ரோந்துப் பணிகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.

