உலகக் கோப்பை 2026:நோர்வேயை வீழ்த்தி முதலிடம் பிடித்தது பிரான்ஸ் – உஸ்மான் டெம்பேலேயின் அபார மூன்று இலக்குகளால் வெற்றி
2026ம் ஆண்டு உலகக் கோப்பைக் கால்பந்துத் தொடரின் குழுச் சுற்றுப் போட்டியில், பிரான்ஸ் அணி நான்குக்கு ஒன்று என்ற கணக்கில் நோர்ர்வே அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
முந்தைய ஆட்டங்களில் செனகல் மற்றும் ஈராக் அணிகளைத் தோற்கடித்திருந்த பிரான்ஸ், இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்திலும் வெற்றி வாகை சூடி, தனது குழுவில் முதலிடத்தை உறுதி செய்துள்ளது.
முதன்மைப் பயிற்சியாளர் டிடியர் டெசாம்ப் களத்தில் இல்லாத நிலையில், மாற்றுப் பயிற்சியாளரான கீ ஸ்டீபனின் வழிகாட்டுதலில் பிரான்ஸ் அணி மிகவும் உத்வேகத்துடன் ஆட்டத்தைத் தொடங்கியது.
ஆட்டம் தொடங்கிய இருபதாவது வினாடியிலேயே அணித்தலைவர் கிளியன் எம்பாப்பே உதைத்த பந்து இலக்குக் கம்பத்தில் பட்டுத் திரும்பியதால் அரங்கமே அதிர்ந்தது.
அதனைத் தொடர்ந்து, ஆட்டத்தின் ஏழாவது நிமிடத்தில் எம்பாப்பே மிகத் துல்லியமாக அளித்த பந்தை நேர்த்தியாகப் பெற்ற உஸ்மான் டெம்பேலே தனது முதல் இலக்கைப் பதிவு செய்து அணிக்கு முன்னிலை தேடித்தந்தார்.
அடுத்த பதினைந்து நிமிடங்களுக்குள், அபாய எல்லைக்கு வெளியிலிருந்து ஒரு சிறப்பான உதையின் மூலம் டெம்பேலே தனது இரண்டாவது இலக்கை அடைந்தார்.
பிரான்ஸ் அணியினர் இந்த வெற்றியை முழுமையாகக் கொண்டாடி முடிப்பதற்குள், அடுத்த நிமிடமே நோர்வே அணியின் திலோ ஒஸ்கார்ட் ஒரு இலக்கைப் பதிவு செய்து சுதாரிப்பைக் காட்டினார்.
இருப்பினும், ஆட்டத்தின் முப்பதாவது நிமிடத்தில் மீண்டும் பந்தைக் கைப்பற்றிய டெம்பேலே, மிகச் சிறப்பாக மற்றொரு இலக்கைப் பதிவு செய்து, ஒரே ஆட்டத்தில் மூன்று இலக்குகளை வீழ்த்தும் அரிய சாதனையை நிறைவு செய்தார்.
இதனால் முதல் பாதி ஆட்ட முடிவிலேயே பிரான்ஸ் அணி மூன்றுக்கு ஒன்று என வலுவான முன்னிலையைப் பெற்றது.
ஆட்டத்தின் இரண்டாம் பாதியில், தற்காப்புத் தவறால் நார்வே அணிக்கு ஒரு தண்டனை உதை வாய்ப்பு வழங்கப்பட்டது.
நோர்வே வீரர் ஜார்ஜென் ஸ்ட்ராண்ட் லார்சன் உதைத்த பந்தை, பிரான்ஸ் இலக்குக் காவலர் மைக் மைக்னன் மிக லாவகமாகத் தடுத்து நிறுத்தி அணியின் வெற்றியை அரணாகப் பாதுகாத்தார். இறுதியாக, ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் டிசையர் டூயே பிரான்ஸ் அணிக்கான நான்காவது இலக்கைப் பதிவு செய்து ஆட்டத்தை முழுமையாக முடித்து வைத்தார்.
இந்தச் சிறப்பான வெற்றியின் மூலம் குழுச் சுற்றை வெற்றிகரமாகக் கடந்துள்ள பிரான்ஸ் அணி, செவ்வாய்க்கிழமை இரவு அடுத்த சுற்றுப் போட்டியில் தங்களது பலத்தை நிரூபிக்கத் தயாராகி வருகிறது. எதிரணி யார் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. See less

