அவுஸ்திரேலியாவில் 7,000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் வெற்றிடம்!
வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இன்றித் தவிப்பு
அவுஸ்திரேலியாவில் குடியேற்றவாசிகளின் வருகைக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால், நாட்டின் ஹோட்டல் மற்றும் உணவகத் துறையில் கடுமையான ஊழியர் பற்றாக்குறை ஏற்படும் என அத்துறை சார்ந்த பிரதிநிதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாகப் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அவுஸ்திரேலிய ஹோட்டல் சங்கம் (Australian Hotels Association – AHA) விசேட பிரச்சாரத் திட்டமொன்றையும் ஆரம்பித்துள்ளது.
அவுஸ்திரேலியாவில் தற்போது கூட சமையல்காரர்கள் மற்றும் உணவு தயாரிப்பு ஊழியர்களுக்கான சுமார் 7,000 வேலைவாய்ப்புகள் வெற்றிடமாக உள்ளதாக அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
புலம்பெயர் தொழிலாளர்கள் இல்லையென்றால், பல ஹோட்டல்களில் அறைகளைச் சுத்தம் செய்வது முதல் உணவகச் சேவைகளை முன்னெடுப்பது வரை அன்றாடப் பணிகளைத் தொடர்ந்து நடத்துவது மிகக் கடினமாகிவிடும் எனவும் அப்பிரச்சாரத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, அவுஸ்திரேலிய இன சமூக மன்றங்களின் சம்மேளனம் (FECCA) மேற்கொண்ட ஆய்வொன்றின்படி, 70 சதவீதத்திற்கும் அதிகமான வணிக உரிமையாளர்கள் தங்களது அத்தியாவசியப் பணிகளுக்கு வெளிநாடுகளில் பிறந்த ஊழியர்களின் பங்களிப்பு அவசியம் எனத் தெரிவித்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவின் முக்கிய அரசியல் கட்சிகள் பலவும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் கொள்கைகளை முன்வைத்துள்ள பின்னணியிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே, குடியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் போது நாட்டின் தொழிலாளர் தேவை மற்றும் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என வணிகத் துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

