பிரித்தானியாவில் முகத்தை மறைக்கும் ஆடைகளுக்குக் கட்டுப்பாடு !!
மேலும் பல நகரங்களுக்கு விரிவடைகிறது!
சமூக விரோதச் செயல்களைத் தடுக்க நடவடிக்கை – மத மற்றும் கலாசார அடிப்படையிலான முகக்கவசங்களுக்கு விலக்கு!
பிரித்தானியாவில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் முகத்தை மறைக்கும் Balaclava உள்ளிட்ட ஆடைகளை அணிவதற்கான கட்டுப்பாடுகளை மேலும் பல நகரங்களுக்கும் விரிவுபடுத்துவது குறித்து உள்ளூராட்சி நிர்வாகங்கள் பரிசீலித்து வருகின்றன.
நொட்டிங்ஹாம் (Nottingham) நகரில் கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், டெர்பிஷையரில் (Derbyshire) உள்ள ஹீனர் (Heanor) நகரில் இதேபோன்ற நடைமுறை இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அமலில் இருப்பது தெரியவந்துள்ளது.
முகத்தை மறைத்தால் அபராதமா?
பொது இடங்களைப் பாதுகாப்பதற்கான Public Spaces Protection Order (PSPO) என்ற சட்ட ஏற்பாட்டின் கீழ் இந்தக் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
இதன்படி, பொதுமக்களுக்குத் தொந்தரவு, அச்சம் அல்லது மனஉளைச்சலை ஏற்படுத்தும் நோக்கில் அடையாளத்தை மறைப்பதாக அதிகாரிகள் நியாயமான அடிப்படையில் சந்தேகித்தால், முகத்தை மறைக்கும் ஆடைகளை அகற்றுமாறு கோர முடியும்.
இதில் Balaclava, முகக்கவசங்கள் மற்றும் முகத்தை மறைக்கும் துணிகள் அடங்குகின்றன.
எனினும், மத அல்லது கலாசார காரணங்களுக்காக அணியப்படும் முகத்தை மறைக்கும் ஆடைகளுக்கு இந்தக் கட்டுப்பாடு பொருந்தாது.
சமூக விரோதச் சம்பவங்கள் குறைந்துள்ளனவா?
ஹீனர் மற்றும் லோஸ்கோ (Loscoe) பகுதிகளில் காவல்துறையிடம் பதிவான சமூக விரோதச் சம்பவங்களின் எண்ணிக்கை இந்தக் காலப்பகுதியில் குறைந்துள்ளபோதிலும், அதற்கு முகத்தை மறைக்கும் ஆடைகளுக்கான கட்டுப்பாடு மட்டுமே காரணம் என்பதை உறுதிப்படுத்த முடியாது.
ஹீனர் பகுதியில் PSPO விதிகளின் கீழ் இரண்டு அபராத அறிவிப்புகள் வழங்கப்பட்டதாகவும், அவை இரண்டும் செலுத்தப்பட்டுள்ளதாகவும் உள்ளூராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நொட்டிங்ஹாம் நகரில் இதுவரை அபராதங்கள் எதுவும் விதிக்கப்படவில்லை என BBC செய்தி குறிப்பிடுகிறது.
மேலும் பல நகரங்களில் கட்டுப்பாடுகள்?
வொல்வர்ஹாம்ப்டன் (Wolverhampton) நகரிலும் இதேபோன்ற கட்டுப்பாடுகள் ஏற்கெனவே அமலில் உள்ளன.
ஸ்டாஃபர்ட் (Stafford) நகரில் டிசம்பர் மாதம் புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, டெர்பி (Derby), ஸ்டோக்-ஒன்-ட்ரெண்ட் (Stoke-on-Trent), மான்ஸ்ஃபீல்ட் (Mansfield), லஃப்பரோ (Loughborough) ஆகிய இடங்களிலும் இதுபோன்ற நடவடிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
பொதுமக்களின் கருத்து,
முகத்தை மறைத்துக்கொண்டு குழுக்களாகச் சுற்றித்திரியும் சிலரின் நடவடிக்கைகள், குறிப்பாக வயதானவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதாக ஹீனர் நகரவாசிகள் BBC-யிடம் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம், கட்டுப்பாடுகளை அறிவிப்பதைவிட அவற்றைச் சரியான முறையில் நடைமுறைப் படுத்துவதே முக்கியமான சவால் என்றும் சிலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.
காவல்துறையினர், உடனடியாக அபராதம் விதிப்பதைவிட முதலில் பொதுமக்களுடன் கலந்துரையாடி, அறிவுறுத்தி, சமூக ஒத்துழைப்புடன் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கே முன்னுரிமை வழங்குவதாகக் கூறியுள்ளனர்.
இது பிரித்தானியா முழுவதும் அமல்படுத்தப்பட்ட பொதுவான முகக்கவசத் தடை அல்ல. குறிப்பிட்ட உள்ளூராட்சிப் பகுதிகளில், சமூக விரோதச் செயல்களைத் தடுப்பதற்காக நடைமுறைப்படுத்தப்படும் கட்டுப்பாடாகும்.

