பிரித்தானியாவில் வசிக்கும் 5 பேரில் ஒருவர் வெளிநாட்டில் பிறந்தவர்: OECD ஆய்வில் தகவல்!
பிரித்தானியாவில் வசிக்கும் மக்களில் சுமார் ஐந்தில் ஒருவர் வெளிநாட்டில் பிறந்தவர் என பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (OECD) வெளியிட்டுள்ள ஆய்வில் தெரியவந்துள்ளது.
மற்றைய எந்தவொரு வளர்ந்த நாட்டையும் விட, பிரித்தானியாவின் மொத்த சனத்தொகையில் வெளிநாட்டில் பிறந்தவர்களின் விகிதம் மிக வேகமாக அதிகரித்துள்ளது.
2015-ஆம் ஆண்டில் 13% ஆக இருந்த இந்த விகிதம், 2025-ஆம் ஆண்டில் 19% ஆக உயர்ந்துள்ளது. இது 4.6 மில்லியன் (46 இலட்சம்) மக்களின் அதிகரிப்பாகும். இதே காலகட்டத்தில் முன்னணிப் பொருளாதார நாடுகளில் பதிவான மிகப்பெரிய உயர்வு இதுவாகும்.
துறைசார் பங்களிப்பு: பிரித்தானியாவில் வசிக்கும் புலம்பெயர்ந்தோரில் 18% இற்கும் அதிகமானோர் சுகாதாரத் துறையில் பணியாற்றுகின்றனர்.
அதிகளவில் புலம்பெயர்ந்த நாடுகள்: கடந்த ஆண்டு பிரித்தானியாவுக்கு அதிகளவிலான புலம்பெயர்ந்தோரை அனுப்பிய முதல் ஐந்து நாடுகளாக இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், சிம்பாப்வே மற்றும் சீனா ஆகியன உள்ளன.
பிரித்தானியர்கள் வெளியேறிய நாடுகள்: பிரித்தானியாவை விட்டு வெளியேறும் பிரித்தானிய மக்களின் மிகவும் விருப்பமான இடங்களாக ஸ்பெயின், அமெரிக்கா, அவுஸ்திரேலியா, போர்த்துக்கல் மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் உள்ளன.
சர்வதேச ஒப்பீடு: வளர்ந்த நாடுகளில் வசிக்கும் வெளிநாட்டில் பிறந்தவர்களின் சராசரி விகிதம் 12% ஆக உள்ள நிலையில், அவுஸ்திரேலியா மற்றும் சுவிட்சர்லாந்தில் மூன்று பேரில் ஒருவர் வெளிநாட்டில் பிறந்தவராகவும், லக்சம்பேர்க்கில் பாதிக்கும் மேற்பட்டோர் புலம்பெயர்ந்தோராகவும் உள்ளனர்.
சட்டபூர்வமாகக் குடியேறியவர்கள் பிரித்தானியப் பிரஜைகளைப் போலவே சலுகைகளையும் பொதுச் சேவைகளையும் பெறுவதற்கு வழிவகுக்கும் ‘நிரந்தர வதிவிட உரிமையை’ (Indefinite Leave to Remain) கோருவதைக் கடினமாக்க உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் (Shabana Mahmood) திட்டமிட்டிருந்தார்.
எனினும், தமது கடுமையான குடியேற்றக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தளர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு அவர் உள்ளானதைத் தொடர்ந்து இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
வெளிநாட்டுப் பராமரிப்புப் பணியாளர்களை (Care workers) அதிகளவில் ஆட்சேர்ப்பு செய்தமை குடியேற்றத்தில் திடீர் உயர்வுக்கு வழிவகுத்ததாக OECD குறிப்பிட்டுள்ளது. எனினும், 300,000 வெளிநாட்டுப் பராமரிப்புப் பணியாளர்களுக்கு இப்புதிய மாற்றங்களிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என உள்துறைச் செயலாளர் அறிவித்திருந்ததுடன்,
2025-ஆம் ஆண்டில் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

