நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிலவிய மோசமான காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்த நிலைமைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம், இன்று பாராளுமன்றத்தில் நடைபெறும்.
இன்று (04) பி.ப 5.30 மணி முதல் பி.ப 9.30 மணிவரை இவ்விவாதத்தை நடத்துவதற்கு சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல தலைமையில் நேற்று (03) நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, முன்னர் தீர்மானிக்கப்பட்டபடி, ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான விவாதமும் இன்று காலை 9.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை நடைபெறவுள்ளது.
இதனைத் தொடர்ந்து இது தொடர்பான வாக்கெடுப்பு மாலை 5.00 மணிக்கு நடைபெறும். வாக்கெடுப்பு முடிவடைந்ததும் மாலை 5.30 மணிக்கு எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் அனர்த்த நிலைமைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.