தற்காப்புக்காக துப்பாக்கிகளை வழங்கும்போது, ஒருவருக்கு ஒரு துப்பாக்கியை மாத்திரம் வழங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.
துப்பாக்கிகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பின்னரே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
ஒரு நபருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட துப்பாக்கிகளை பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டால், பாதுகாப்பு பகுப்பாய்வு நடத்தப்பட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
எனினும், அந்த பகுப்பாய்வின் பின்னர் மற்றொரு துப்பாக்கி வழங்குவதா, இல்லையா? என்பது தொடர்பான இறுதி முடிவு பாதுகாப்பு அமைச்சிடம் தான் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட துப்பாக்கிகள் தொடர்பான ஆய்வுகள் தற்போது பாதுகாப்பு அமைச்சின் வளாகத்தில் நடத்தப்படுகின்றன.
பொதுமக்களுக்கு 1500இற்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளதுடன், சில நபர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட துப்பாக்கிகளை மீள ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.