வொஷிங்டன் இல்லத்தை காலி செய்கிறார் இல்ஹான் ஓமர்

அமெரிக்க ஃபெடரல் அதிகாரிகளின் சோதனையைத் தொடர்ந்து வொஷிங்டன் இல்லத்தை காலி செய்கிறார் இல்ஹான் ஓமர்:

பாதுகாப்பு அச்சம் காரணம் என விளக்கம்! அமெரிக்க நாடாளுமன்றப் பிரதிநிதிகள் சபை உறுப்பினரான இல்ஹான் ஓமர் (Ilhan Omar), தனது வொஷிங்டன் இல்லத்தை காலி செய்ய முடிவெடுத்துள்ளதாக அறிவித்துள்ளார்.

அண்மையில் அமெரிக்க ஃபெடரல் விசாரணை அதிகாரிகளால் தனது வீட்டில் நடத்தப்பட்ட அதிரடித் தேடுதல் நடவடிக்கையைத் தொடர்ந்து, அங்கு பாதுகாப்பற்ற சூழலை உணர்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

புதன்கிழமை ‘MS NOW’ ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் இந்த விடயம் தொடர்பில் முதன்முறையாகக் கருத்துத் தெரிவித்த அவர், தேர்தல் நெருங்கும் வேளையில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தன்னை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாகக் கூறினார்.

 

5 மணி நேரச் சோதனையும் குற்றச்சாட்டுகளும்:

கடந்த வாரம் இல்ஹான் ஓமரின் இல்லத்தில் நீதிமன்ற அனுமதியுடன் கூடிய தேடுதல் பிடியாணையின் அடிப்படையில், அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை புலனாய்வுப் பிரிவினர் சுமார் 4 முதல் 5 மணி நேரம் தீவிர சோதனை நடத்தினர்.

 

இது ஒரு “தொடர் ஃபெடரல் குற்றவியல் விசாரணையின் ஓர் அங்கம்” என நீதித்துறை பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். குடிவரவு ஆவண மோசடி மற்றும் சதித்திட்டம் தொடர்பான குற்றச்சாட்டுகள் எதிர்காலத்தில் அவர் மீது சுமத்தப்பட வாய்ப்புள்ளதாக ஊடகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

 

இந்தச் சோதனையின் போது தொலைபேசிகள், குறிப்பேடுகள், சோமாலி மொழி சிறுவர் புத்தகம் மற்றும் விண்டேஜ் கமரா உள்ளிட்ட 17 பொருட்களை அதிகாரிகள் பதிவு செய்து கைப்பற்றிச் சென்றதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

குற்றச்சாட்டுகளை மறுக்கும் இல்ஹான் ஓமர்:

தான் எந்தத் தவறும் செய்யவில்லை எனத் திட்டவட்டமாக மறுத்துள்ள இல்ஹான் ஓமர், தமக்கு எதிரான இந்த நடவடிக்கை முழுக்க முழுக்க அரசியல் ரீதியான அச்சுறுத்தல் என சாடியுள்ளார்.

 

“நான் 12 வயதில் அகதியாக எனது குடும்பத்துடன் அமெரிக்கா வந்தேன். 12 வயது சிறுமி குடிவரவு சேவைகளை ஏமாற்றச் சதி செய்தார் என்று குற்றம்சாட்டுவது முற்றிலும் அபத்தமானது” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

சோமாலியாவில் பிறந்து, 2000-ஆம் ஆண்டில் அமெரிக்கக் குடியுரிமை பெற்ற இல்ஹான் ஓமர், மினசோட்டாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முற்போக்கு ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.

 

நீண்ட காலமாக முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் கடுமையான விமர்சகராக விளங்கி வரும் இவர், தீவிர வலதுசாரி அரசியல் சதி கோட்பாடுகளாலும் விமர்சனங்களாலும் தொடர்ச்சியாக இலக்கு வைக்கப்பட்டு வந்துள்ளார்.

நவம்பர் 3 இடைத்தேர்தல் மிக அருகில் இருக்கும் தருணத்தில் இத்தகைய சோதனைகள் நடத்தப்பட்டிருப்பது ஜனநாயகக் கட்சியினர் மத்தியில் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், தேர்தலை முன்னிட்டு நீதித்துறை விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

Recommended For You

About the Author: admin