டயானா கமகேவை உடனடியாகக் கைது செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு!

டயானா கமகேவை உடனடியாகக் கைது செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.

 

போலியான பிறப்புச் சான்றிதழைச் சமர்ப்பித்து தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு நேற்று (22) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாததைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

இதற்கமைய, அவரைக் கைது செய்வதற்கான பிடியாணையையும் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

 

குறித்த வழக்கில் சாட்சிய விசாரணைகள் நிறைவடைந்துள்ள நிலையில், இருதரப்பு சமர்ப்பணங்களுக்கான திகதியை நிர்ணயிப்பதற்காகவே நேற்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

 

இதற்கு முன்னரும் வழக்கு விசாரணைக்கான திகதியை மறந்துவிட்டதாகக் கூறி அவர் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியிருந்தார். இதனையடுத்து, அவரைக் கைது செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நதீ அபர்ணா சுவந்துருகொட உத்தரவிட்டிருந்தார்.

 

இலங்கைப் பிரஜை அல்ல என்பதை அறிந்திருந்தும், உரிய சட்ட நடைமுறைகளின் மூலம் தனது பெயரை மாற்றிக்கொள்ளாமல், ‘டயானா கமகே’ என்ற பெயரில் தேசிய அடையாள அட்டையைப் பெறுவதற்காக ஆள் பதிவுத் திணைக்கள அதிகாரிகளை ஏமாற்ற முயன்றதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

 

மேலும், 4658 என்ற இலக்கத்தைக் கொண்ட போலியான பிறப்புப் பதிவேட்டைத் தயாரித்தமை மற்றும் அதற்குத் துணைபோனமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

 

2004 ஒக்டோபர் 9ஆம் திகதி முதல் டிசம்பர் 1ஆம் திகதி வரையான காலப்பகுதியில் போலியான பிறப்புச் சான்றிதழைப் பயன்படுத்தி தேசிய அடையாள அட்டையையும் வெளிநாட்டுப் பயணக் கடவுச்சீட்டுகளையும் பெற்றுக்கொண்டதாகவும் அவருக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

 

இந்த வழக்கில், தண்டனைச் சட்டக்கோவையின் 32, 102, 457 மற்றும் 459 ஆகிய பிரிவுகளின் கீழ் மூன்று குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய குற்றப்பத்திரிகைகள் 2024 ஜூன் 6ஆம் திகதி சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டன.

 

அரச தரப்பு சார்பில் அரச சட்டத்தரணி அகிலா தல்பதாது ஆஜராகியிருந்தார்.

Recommended For You

About the Author: admin