இலங்கையில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் குறைவு!
2026இல் இதுவரை 18 சம்பவங்கள் பதிவு – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தகவல்.
இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுடன் தொடர்புடைய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இந்த ஆண்டு குறைவடைந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
2025ஆம் ஆண்டு 29 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியிருந்த நிலையில், 2026ஆம் ஆண்டில் இதுவரை 18 சம்பவங்கள் மாத்திரமே பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று (23) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளைக் குறிவைத்து முன்னெடுக்கப்படும் தீவிர நடவடிக்கைகள் காரணமாக, இவ்வாறான சம்பவங்களை ஓரளவுக்குக் கட்டுப்படுத்த முடிந்துள்ளதாகத் தெரிவித்தார்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடைய கொலைகள் மற்றும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தொடர்பான புள்ளிவிவரங்களின்படி, 2020ஆம் ஆண்டு 2 சம்பவங்களும், 2021ஆம் ஆண்டு 4 சம்பவங்களும், 2022ஆம் ஆண்டு 23 சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
மேலும், 2023ஆம் ஆண்டு 16 சம்பவங்களும், 2024ஆம் ஆண்டு 42 சம்பவங்களும், 2025ஆம் ஆண்டு 29 சம்பவங்களும் பதிவாகியுள்ளதுடன், 2026ஆம் ஆண்டில் இதுவரை 18 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதன்படி, 2020ஆம் ஆண்டு முதல் 2026ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் மொத்தமாக 134 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டுகளில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் அதிகரித்தமைக்கு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுக்கு இடையிலான மோதல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளுக்கு இடையிலான முரண்பாடுகளே காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் உள்ளிட்ட 236 இலங்கையர்களுக்கு எதிராக சர்வதேச பொலிஸான INTERPOL சிவப்பு அறிவித்தல்களை வெளியிட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அவர்களில் 94 பேர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும், 30 பேர் கொலைக் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய வழக்குகளில் தேடப்பட்டு வருகின்றனர். ஏனையோர் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பாரிய குற்றங்களுக்காகத் தேடப்படுகின்றனர்.
நாடு முழுவதும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்துவதற்காக 17 விசேட குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
உள்நாட்டில் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதுடன், வெளிநாடுகளில் இருந்து செயற்படும் போதைப்பொருள் கடத்தல்காரர்களையும் இலங்கைக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கைகளின் மூலம் நாட்டில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

