சுன்னாகத்தில் அராஜகம்! நான்கு பொலிஸார் பணியிடை நீக்கம்!!

சுன்னாகத்தில் அராஜகத்தில் ஈடுபட்ட உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர், பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் மற்றும் இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் என நால்வர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை,  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலையத்துக்கு விசேட இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுன்னாகம் பொலிஸார் விபத்து ஒன்று இடம்பெற்ற பகுதிக்கு சென்று அங்கிருந்த பெண்கள் உட்பட பலர் மீது கொடூரத் தாக்குதல் மேற்கொண்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன. இவ்வாறான பின்னணியிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுன்னாகம் பொலிஸ் நிலையத்தின் புதிய கட்டடத்தை திறந்து வைப்பதற்காக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய வருகை தந்து சென்ற சில மணி நேரத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றது.

இந்தச் சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினரும் தமது கண்டனங்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: RK JJ