வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கணிசமான மக்கள் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் சங்கு சின்னத்துக்கு வாக்களிப்பதில் ஆர்வத்துடன் இருக்கிறார்கள் – இவ்வாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த. சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
யாழில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
மாற்றத்தை பற்றி பலர் சொல்கின்றனர். அநுரகுமார திஸநாயக்க வெற்றி பெற்றதை வைத்து இதனை பலர் கூறுகின்றனர். மார்க்ஸிஸ லெனினிச கொள்கைகளை பேசும் ஒருவர் ஆட்சியில் ஏறியமை மாற்றம்தான். ஆனால், தமிழ் மக்களுக்கு ஒரு பிரச்சினை இருக்கிறது. அதிகார பரவலாக்கம் தேவை என்ற விடயங்களை அநுர குமார திஸநாயக்க தரப்பு ஏற்பதாக தெரியவில்லை.
பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என வலியுறுத்திய அநுர குமார திஸநாயக்க தற்போது அதை திருத்தி பயன்படுததலாம் என தற்போது சொல்கின்றனர்.
தமிழ் மக்கள் இம்முறை சிந்தித்து ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியை பலப்படுத்த வேண்டும். சங்கு வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் 2 அல்லது 3 ஆசனங்கள் கிடைக்கும் – என்றார்.