இந்தியாவில் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த முன்னாள் LTTE உறுப்பினர் இலங்கையில் கைது
இந்தியாவில் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் ஒருவர், இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்ட நிலையில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
50 வயதுடைய சந்தேகநபர், கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி இரவு இலங்கைக்கு வந்தபோது கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம், சண்டிலிப்பாய் பகுதியைச் சேர்ந்த இவர், 2015ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பை மீளக் கட்டியெழுப்ப முயன்றதாகச் சந்தேகத்தின் பேரில் இந்தியாவில் கைது செய்யப்பட்டிருந்தார்.
மேலதிக விசாரணைகளுக்காக அவரை 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு பெறப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

