2.8 பில்லியன் செலவில் பேஸ்லைன் வீதியின் 3ஆம் கட்ட அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்!
கொழும்பு மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், பேஸ்லைன் வீதி விரிவாக்கல் திட்டத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் இன்று (27) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.
முழுக்க முழுக்க இலங்கை அரசாங்கத்தின் 2.8 பில்லியன் ரூபா உள்நாட்டு நிதியுதவியுடன் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர தலைமையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் இதற்கான பணிகள் முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டன.
இத்திட்டத்தின் கீழ், கிருளப்பனை சந்தியிலிருந்து கொழும்பு – ஹொரண பிரதான வீதியின் துடுகெமுனு வீதி வரையிலான பகுதி விரிவுபடுத்தப்பட்டு, நவீன வசதிகளுடன் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்படும் இத்திட்டம் நிறைவடையும் பட்சத்தில், கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கான போக்குவரத்து சேவை மேலும் சீரடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

