ஞானசார தேரரை உடனடியாக விடுவிக்கவேண்டும் – ஐ. தே. க அறிக்கை வெளியீடு!
கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் எனவும் மூன்று பிரதான பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களின் தலையீட்டுடன் இந்த பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறும் ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
அவரை விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டம், மகாநாயக்க தேரர்களின் அறிவுறுத்தலுக்கு அமைவாகத் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதாக இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பிட்டுள்ளது.
நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டுக்கான அதிகபட்ச சிறைத்தண்டனை 18 மாதங்கள் மாத்திரமே என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா வழங்கிய விளக்கமும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், இந்த காலப்பகுதியில் ஞானசார தேரர் ஏற்கனவே 10 மாதங்களுக்கும் அதிகமான சிறைத்தண்டனையை அனுபவித்து விட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் மகாநாயக்க தேரர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்தத் தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டமையையும் ஐக்கிய தேசியக் கட்சி நினைவுகூர்ந்துள்ளது.
அத்துடன், ஞானசார தேரருக்கு மீண்டும் ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படலாம் என உயர்நீதிமன்றமும் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளதாக அந்த கட்சி தெரிவித்துள்ளது.
ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு பேரணி அல்லது சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பங்கேற்காத பௌத்த பிக்குகளுக்கு எதிராகவும் அரசாங்கம் நீதிமன்ற உத்தரவுகளைப் பெற்றிருப்பதை விமர்சித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி, இத்தகைய நடவடிக்கைகள் பாரிய தவறுகள் என்றும் வர்ணித்துள்ளது.
மேலும், ஞானசார தேரரின் காவி உடையை அகற்றுவதற்கு உத்தரவிட்டவர்கள் தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.
எனவே, நிலவும் முரண்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மகாநாயக்க தேரர்களின் தலையீட்டுடன் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு அரசாங்கம் உடனடியாக ஜனாதிபதி மன்னிப்பு வழங்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

