ஹட்டன் தனியார் பேருந்து நிலையத்தில் மண்சரிவு – இரண்டு பேருந்துகள் சேதம்!
ஹட்டன் பகுதியில் பெய்து வரும் கடும் மழை காரணமாக, ஹட்டன் தனியார் பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு தனியார் பேருந்துகள் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.
இந்த சம்பவம் இன்று (26) பிற்பகல் சுமார் 3.30 அளவில் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதன்போது, இரண்டு பேருந்துகளினதும் பின்புறப் பகுதிகள் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில், இரு பேருந்துகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தைத் தொடர்ந்து, அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏனைய பேருந்துகளுக்கு பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், அவற்றை அங்கிருந்து அப்புறப்படுத்த தனியார் பேருந்து நிலையத்தின் நேரக்கட்டுப்பாட்டாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஹட்டன் பகுதியில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கனமழையால் மண்சரிவு அபாயம் அதிகரித்துள்ள நிலையில், பொதுமக்களும் வாகன சாரதிகளும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

