பிரவுன்ஸ் ஹில் காணி விவகாரம்: பசில் ராஜபக்ஷவைக் கைது செய்ய திறந்த பிடியாணை

பிரவுன்ஸ் ஹில் காணி விவகாரம்: பசில் ராஜபக்ஷவைக் கைது செய்ய திறந்த பிடியாணை

இலங்கையின் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவைக் கைது செய்வதற்குத் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாத்தறை பிரவுன்ஸ் ஹில் பகுதியில் அமைந்துள்ள காணியைக் கொள்வனவு செய்தமை தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், மாத்தறை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினால் (FCID) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

எலியகந்த வீதியில் அமைந்துள்ள சுமார் ஒன்றரை ஏக்கர் தென்னந்தோட்டக் காணி, ஜேர்மன் நாட்டவரான ஹேர்பர்ட் கெல்லருக்குச் சொந்தமானதாக இருந்ததாகவும், குறித்த காணி 60 மில்லியன் ரூபாவுக்கு பசில் ராஜபக்ஷவினால் கொள்வனவு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

கடந்த ஒக்டோபர் 6ஆம் திகதி, விசாரணைகளின் ஒரு பகுதியாக குறித்த காணியின் பயன்பாட்டை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என நிதிக் குற்ற விசாரணைப் பிரிவு நீதிமன்றத்துக்கு அறிவித்திருந்தது.

 

மேலும், நீதிமன்றத்தில் பல சந்தர்ப்பங்களில் ஆஜராகத் தவறியதையடுத்து, பசில் ராஜபக்ஷவின் பிணைப் பணத்தைப் பறிமுதல் செய்யவும், பிணையாளர்களிடமிருந்து பிணைத் தொகையை மீளப் பெற்றுக்கொள்ளவும் நீதிமன்றம் முன்னதாக உத்தரவிட்டிருந்தது.

 

இந்த நிலையில், காணி கொள்வனவு தொடர்பான விசாரணைகளின் தொடர்ச்சியாகப் புதிய திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin