“முள்ளிவாய்க்காலின் இரத்தக்கறை தற்போதைய ஆட்சியாளர்களின் கைகளிலும் உள்ளது”

ஸ்ரீலங்காவின் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் நிலைப்பாடு வெளியிடப்பட்டுள்ளது.
அன்பிற்குரிய தமிழ் மக்களே!
எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி ஸ்ரீலங்காவின் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.
ஸ்ரீலங்கா தேசம் தமது ஆட்சி அதிகாரத்தை தீர்மானிக்கும் தேர்தலாக இது இருந்த போதும் இத்தேர்தலானது தமிழர் தேசத்தின் மீதும் திணிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்காவின் நாடாளுமன்றம் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு எவ்வித தீர்வையும் தராத போதும் எமது பிரதிநிதித்துவத்தையாவது உறுதிப்படுத்த வேண்டிய ஒரு கட்டாய நிலையிலே உள்ளோம். அதேபோலவே தமிழ் மக்கள் எமது அரசியல் நிலைப்பாட்டையும் உறுதியாக வெளிப்படுத்த வேண்டிய தேவையும் உள்ளது.
இன்று ஸ்ரீலங்காவின் பேரினவாதக்கட்சிகள் தாமே தமிழ் மக்களின் மீட்பர்கள் போலவும், தமிழ் மக்களுக்கு அரசியல் பிரச்சினை எதுவுமே இல்லை என்பது போல ஒரு மாயத்தோற்றததை எம்மக்களிடையே, குறிப்பாக இளைய சமுதாயத்தை குறிவைத்தே விதைக்கின்றனர்.
குறிப்பாக தேசிய மக்கள் சக்தி (NPP) என்னும் முகமூடியுடன் வலம் வரும் ஜே. வி. பி. எனும் சிங்கள இனவாத கட்சி, தமிழ் மக்களின் விடுதலை அவாவினை இலங்கை தேசியத்தில் கரைத்து சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை நிறுவுவதில் மும்முரமாக உள்ளது.
தமிழர் தாயகத்தை நீதிமன்றத்தினூடாக இருகூறாக பிரிப்பதில் ஆணிவேராக செயற்பட்ட இவர்கள், தமிழர் தேசத்திற்கும் ஸ்ரீலங்கா தேசத்திற்கும் இடையில் சர்வதேச அனுசரணையுடன் நடைபெற்ற சமாதான பேச்சுவார்த்தை முறிவடைய செய்வதில் காத்திரமான பங்கு வகித்தவர்கள்.
குறிப்பாக சுனாமி பேரழிவின் பின் உருவாக்கப்பட்ட சுனாமி கட்டமைப்பை (Post Tsunami Operational Management Structure (PTOMS)) செயலிழக்க செய்வதில் பெரும் பங்கு வகித்தவர்கள்.
தென்னிலங்கையில் சிங்கள இனவாதத்தை தூண்டி, தமிழர் மீது நடத்தப்பட்ட இனவழிப்பு யுத்தத்திற்கு ஊக்கிகளாக இயங்கியவர்கள். முள்ளிவாய்க்காலின் இரத்தக்கறை இவர்கள் கையிலும் உள்ளது.
எமது இனத்தின் மீதான இனவழிப்பை இலகுவாக மறந்து – மறைத்து தமிழருக்கு இனப்பிரச்சினையே இல்லை என்று எமக்கே பாடம் எடுக்கின்றனர். இவர்களும் சிங்கள பேரினவாதிகளின் இன்னொரு வடிவமே.
இடதுசாரிகளாக தம்மை வெளிப்படுத்தும் இவர்கள் ஈழத்தமிழ் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ள என்றுமே தயாராக இல்லை. இவர்களை எமது தாயகத்திலிருந்து முழுமையாக அகற்ற வேண்டிய தலையாய கடமை ஒவ்வொரு தமிழனுக்கும் உண்டு.
எமது மண்ணிலேயே பிறந்து வளர்ந்தும், அற்ப சலுகைகளுக்காக எம் இனத்தின் இருப்பையே சிங்கள பேரினவாதத்திடம் தாரைவார்க்கும் துரோகிகளும் எமது மண்ணில் எம்மிடையே உள்ளார்கள்.
உரிமைகளை விலைபேசி சலுகைகளை பெற்றவர்கள், இன்று அந்த சலுகைகளை கூட பெற்றுக்கொள்ள முடியாத கையறு நிலையிலேயே உள்ளார்கள். இவர்கள் மீண்டு எழுந்து வரமுடியாத மாபெரும் தோல்வியை வழங்கும் நேரம் இப்போது கனிந்துள்ளது. அதேபோல் தமிழ் தேசியத்தை உதட்டளவில் பேசிக்கொண்டு, தமிழ் மக்களின் இருப்பையும் ஒற்றுமையையும் சிதைப்பதில் மும்முரமாய் உள்ள சிலரும் வாக்கு வேண்டி உங்களிடம் வருவார்கள்.
இந்த கயவர்களுக்கு மீளமுடியாத தோல்வியை கொடுக்க வேண்டிய பாரிய கடமையும் உங்கள் அனைவருக்கும் உண்டு.
ஸ்ரீலங்காவின்
எந்த தேர்தல்களோ அல்லது ஆட்சி பொறிமுறைகளோ தமிழ் மக்களின் தேசிய கேள்விக்கு எந்தப் பதிலையும் தராது என்ற யதார்த்தத்தினை உணர்ந்து கொண்டு, ஆயினும் தமிழ் தேசியத்தின் ஒற்றுமையை, தமிழ் மக்களின் பலத்தினை வெளிப்படுத்தும் விதமாக உங்களின் வாக்குகளை பயன்படுத்துங்கள்.
தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு எமது சுயநிர்ணய உரிமையை பிரயோகிப்பதனூடாக எட்டப்படும் தீர்வே நிரந்தரமாக அமையும். அதன் ஒரு பொறிமுறையாக, தமிழ் மக்களிடையே சர்வதேசத்தினால் நடாத்தி கண்காணிக்கப்படும் ஒரு சர்வசன வாக்கெடுப்பினூடாகவேதான் ஓர் நிரந்தர அரசியல் தீர்வினை அடைய முடியும் என்பதை நாம் திடமாக நம்புகின்றோம். நிரந்தரமான தமிழர் தேசம் இந்த பூமிப்பந்தில் உதிக்க தொடர்ந்தும் பாடுபடுவோம் என உறுதி எடுத்துக் கொள்வோம் – என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: RK JJ