மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பான யோசனைகளை இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைத்துள்ளது.
உரிய முன்மொழிவுகளை மதிப்பீடு செய்து பொதுமக்களின் கருத்துகளைப் பெற்றதன் பின்னரே இறுதி தீர்மானத்தை ஆணைக்குழு அறிவிக்கவுள்ளது.
இதன்படி, நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தப்படாத போதிலும், அலகுகளுக்கான கட்டணத்தை மாத்திரம் குறைப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
இதன்படி, 0 முதல் 30 அலகுகளுக்கு இடைப்பட்ட மாதாந்தக் கட்டணத்தை 8 ரூபாவில் இருந்து 6 ரூபாவாக 2 ரூபாவினால் குறைப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
அத்துடன், 31 முதல் 60 அலகு வரை மின்சாரம் பயன்படுத்துவோருக்கு அலகு ஒன்றுக்கு 20 ரூபாவாக இருந்த கட்டணத்தை 9 ரூபா வரையில் குறைப்பதற்கும், 61 முதல் 90 வரையான அலகுகளுக்கான கட்டணத்தை 18 ரூபா வரையில் குறைப்பதற்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும், 91 முதல் 120 வரையில் அலகு ஒன்றுக்கு 50 ரூபாயாக காணப்பட்ட கட்டணத்தை 30 ரூபாவாக குறைப்பதற்கும் இலங்கை மின்சார சபை முன்மொழிந்துள்ளது.