ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு வரி விதித்த ட்ரம்ப்

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு வரி விதித்த ட்ரம்ப்; இப்போது அதே ரஷ்யாவிடம் தஞ்சம்! – 40,000 தொன் டீசலுடன் அமெரிக்காவை நோக்கிப் புறப்பட்ட கப்பல்!

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு மேலதிக வரிகளை விதித்து, ரஷ்யாவின் எரிசக்தி வருவாயைக் குறைக்க முயன்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தற்போது தனது நாட்டில் அதிகரித்து வரும் எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்த அதே ரஷ்யாவிடமிருந்து டீசலைப் பெறும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.

40,000 மெட்ரிக் டன் டீசலை ஏற்றிய ரஷ்யாவுடன் தொடர்புடைய எண்ணெய்க் கப்பல் ஒன்று அமெரிக்காவின் நியூயார்க்கை நோக்கிப் புறப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவில் அதிகரித்து வரும் எரிபொருள் விலையைக் குறைக்கும் நோக்கில், ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் இடையே புதிய ஏற்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

உக்ரைன் போருக்குப் பின்னர் ரஷ்யாவின் எண்ணெய் வருவாயைக் கட்டுப்படுத்த அமெரிக்கா பல்வேறு பொருளாதாரத் தடைகளை முன்னெடுத்ததுடன், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கும் கூடுதல் வரிகளை விதிப்பதாக ட்ரம்ப் அறிவித்திருந்தார்.

ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்வது தவறு என்ற நிலைப்பாட்டை முன்வைத்து மற்ற நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்த அமெரிக்கா, தற்போது தனது சொந்த எரிபொருள் தேவைக்காக அதே ரஷ்யாவை நாடுவதாக இந்தச் சம்பவம் வெளிப்படுத்துகிறது.

தனது நலனுக்காக ஒரு நாட்டின் எண்ணெயை வாங்குவது ஏற்றுக்கொள்ளத்தக்கது; ஆனால் அதே எண்ணெயை வாங்கும் மற்ற நாடுகளுக்கு வரி விதித்து அழுத்தம் கொடுப்பது எந்த வகையான இரட்டை நிலைப்பாடு? என்ற கேள்வி இந்த விவகாரத்தில் எழுகிறது.

உலக நாடுகளுக்கு பொருளாதார அழுத்தங்களைப் பிரயோகிக்கும் அமெரிக்கா, தனது நாட்டின் எரிபொருள் விலை உயரும்போது அதே கொள்கைகளைத் தளர்த்தி, ரஷ்யாவிடமிருந்து விநியோகத்தைப் பெற முயல்வது அதன் சுயநல அரசியலையும் இரட்டை நிலைப்பாட்டையும் வெளிச்சத்துக்குக் கொண்டுவருகிறது.

Recommended For You

About the Author: admin