7 ஆண்டுகளில் 3,600க்கும் மேற்பட்ட உயிர்கள் பலி!
இலங்கையில் நீண்டகாலமாக அதிகரித்து வரும் யானை – மனித மோதல் காரணமாக, கடந்த 2020 முதல் 2026 வரை 2,662 யானைகளும் 987 மனிதர்களும் உயிரிழந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
வனப்பகுதிகள் அழிக்கப்படல், விவசாய நில ஆக்கிரமிப்பு மற்றும் யானைகளின் பாரம்பரிய வழித்தடங்கள் துண்டிக்கப்பட்டமை போன்ற காரணங்களால் கிராமப்புறங்களில் காட்டு யானைகளின் ஊடுருவல் அதிகரித்து, இத்தகைய மோதல்கள் தீவிரமடைந்து வருகின்றன. கடந்த 2023 ஆம் ஆண்டில் மிக அதிகபட்சமாக 488 யானைகளும் 184 மனிதர்களும் பலியாகியுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு, ஹக்கா பட்டாஸ், சட்டவிரோத மின்சாரக் கம்பிகள் மற்றும் ரயில்களுடன் மோதுதல் போன்றவற்றினாலேயே அதிக அளவிலான யானைகள் உயிரிழப்பதாக வனஜீவராசிகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
யானை – மனித மோதலுக்கு நிலையான தீர்வாக மின்சார வேலிகளை சீரமைத்தல், யானை நடமாட்ட வழிகளைப் பாதுகாத்தல் மற்றும் கிராமப்புற மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற நீண்டகால திட்டங்களை அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

