வீழ்ச்சியடைந்திருக்கும் தமிழ்த் தேசிய அரசியலை கட்டியெழுப்ப வேண்டும்-கண்டுமணி லவகுசராசா

வீழ்ச்சியடைந்திருக்கும் தமிழ்த் தேசிய அரசியலை பரந்துபட்ட மக்களின் பங்கேற்புடன் மீளவும் கட்டியெழுப்ப தமிழ்த்தேசியக் கொள்கையுடைய அரசியல் கட்சிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வடக்கு,கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் திரு கண்டுமணி லவகுசராசா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில்;

 

தமிழ்த்தேசிய அரசியல் வரலாற்றில் முதன்முறையாக வாக்கெடுப்பு மூலம் கட்சித் தலைமை தெரிவு செய்வது கடந்த வாரம் நடைபெற்றுள்ளது.

இந்த ஜனநாயக பண்பை வரவேற்பதோடு- இது நிலைத்திட வேண்டும் என்பதும் எமது விருப்பாகும்.

 

இலங்கையில் உள்ளக அரசியல்,பிராந்திய அரசியல் மற்றும் சர்வதேச சூழல் ஆகியன சிக்கல் மிக்கதாகக் காணப்படும் தற்போதைய சூழலில் தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்தை பொறுப்பேற்றிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் திரு சி.சிறிதரன் அவர்களின் முன்னால் பாரிய கடப்பாடுகள் குவிந்துள்ளன.

இலங்கையின் வடக்கு,கிழக்கு பிராந்தியத்தில் பாரம்பரியமாக இயங்கிவரும் தமிழ்த்தேசிய கொள்கையுடைய தமிழ் அரசியல் கட்சிகள் சில விடயங்கள் தொடர்பில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.அவையாவன;

 

உணர்ச்சிகரமான அரசியல் என்பது நாம் எமது சுய தேசிய உணர்ச்சிகளுக்கு தீனி போடுவது மாத்திரமேயாகும்.இது தமிழ்த் தேசத்தை ஏனைய சமூகங்களிடமிருந்து அந்நியப்படுத்தும். தமிழ்த்தேசம் தனது நியாயாதிக்கத்தை சர்வதேச அளவில் கொள்கைகளுடன் கூடிய அரசியலாக பரிணமிக்கச் செய்ய வேண்டிய கடப்பாடு தமிழ் அரசியல் கட்சிகளுக்கு உள்ளது.

 

வடக்கு,கிழக்கு பிரதேசத்தை தளமாகக் கொண்ட தமிழ் மக்களுக்கும்,அதேபோல் இப் பிரதேசத்தை பூர்வீகமாக கொண்ட முஸ்லிம் மக்களுக்கும்,சிறுபான்மையினராக எல்லையோர கிராமங்களில் வாழ்ந்து வரும் சிங்கள மக்களுக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்த வேண்டிய கடப்பாட்டை தமிழ் அரசியல் கட்சிகள் கொண்டுள்ளன.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமிழ்த்தேசிய அரசியலையும்,தமிழ் மக்களையும், வடக்கு,கிழக்கில் வாழும் முஸ்லிம் மக்கள் மற்றும் சிங்கள மக்களிடமிருந்து பிரிக்காதவாறு கொள்கையை முன்னெடுக்க வேண்டும்.

 

குறிப்பாக வடக்கு கிழக்கில் வாழும் முஸ்லிம் மக்கள் மத்தியில் தமிழ்த்தேசிய அரசியல் தலைமைத்துவங்கள் சார்ந்து சந்தேகங்கள் எழாதவாறு உறவுகளை வெளிப்படைத் தன்மையுடன் பேண வேண்டிய பொறுப்புக் காணப்படுகிறது.

 

வடக்கு கிழக்கு தமிழ் சமூகத்தில் காலம் காலமாக காணப்பட்டு வரும் சமூக ஊனங்களான மேலாதிக்கவாதம், பிரதேசவாதம்,மத ரீதியான வெறுப்புணர்வுகள், புறக்கணிப்புக்கள், சாதிய அடக்குமுறை,ஆணாதிக்கம் ஆகிய பிற்போக்கான போக்குகளில் இருந்து தமிழ் சமூகத்தின் சிந்தனையை மாற்றி சமத்துவ சிந்தனையை கட்டியெழுப்புவதன் மூலம் மாத்திரமே எமக்கான எதிர்காலம் குறித்து விஞ்ஞான பூர்வமான சிந்திக்கும் ஆற்றல் கொண்ட உறுதியான தமிழ்த் தேசத்தைக் கட்டியெழுப்ப முடியும்.அத்தகைய ஒரு மக்கள் சமூகத்தினால் மாத்திரமே எமது அரசியல் இலக்குகளை அடைய முடியும்.இதை அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் தமது அடிப்படைக் கொள்கையாக ஏற்க வேண்டும்.

 

சிங்கள இனவாத அடக்குமுறையின் காரணமாக வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கு இடம்பெயர்ந்து வாழும் மலையக தமிழர்களின் வழித்தோன்றிகள் வடக்கு கிழக்கு மக்களின் வாழ்வியலுடன் பிணைந்து விட்டனர்.இந்தப் பிணைப்பில் சிறு கீறல் கூட ஏற்படாத வண்ணம் பொறுப்புடன் செயற்பட வேண்டிய கடப்பாடு தமிழ் அரசியல் தலைமைகளுக்கு உள்ளது.

 

தமிழரசுக் கட்சி அடங்கலாக அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் பெண்கள் மற்றும் இளையோரின் பங்கேற்பிற்கு கதவுகள் அடைக்கப்பட்டே உள்ளன.தமிழ் அரசியல் தளத்தில் முற்போக்கான ஜனநாயகமான சிந்தனைகள் பரிணமிக்காது தமிழ்த்தேசிய அரசியல் தளம் முடங்கிக் கிடப்பதற்கு இது முக்கிய காரணமாகும்.தமிழ் கட்சிகள் தமது அங்கத்துவ எண்ணிக்கையை உயர்த்தி மக்கள் மயப்பட்ட கட்சிகளாக தமது கட்சிகளை மாற்ற வேண்டும்.

 

புலம்பெயர் நாடுகளில் வாழும் பல்வேறு சக்திகளும் பல்வேறு சக்திகளும் தமிழ் அரசியலில் தமது செல்வாக்கைச் செலுத்த முயல்கின்றனர்.இவர்களின் ஆளுகைக்கு உட்படாது வடக்கு கிழக்கு தாயகப் பிரதேசத்தில் வேரூன்றி தமது உரிமைக்காக அன்றாடம் போராடிக்கொண்டு வாழ்ந்து வரும் மக்களின் நலன்களையே தமிழ் அரசியல் கட்சிகள் பிரதிபலிக்க வேண்டும்.

 

அரச இனவாதத்திற்கு சரணடையாத கொள்கையைக் கொண்டிருக்க வேண்டும்.தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு சிதறிக்கிடக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை மீளவும் பலப்படுத்த வேண்டும்.ஆபிரிக்க தேசிய காங்கிரஸில் காணப்பட்ட கூட்டுப் பலமே தென்னாப்பிரிக்க மக்களின் வெற்றிக்கு அடிப்படையாக அமைந்தது.இந்த உண்மையை தமிழ் அரசியல் கட்சிகள் ஏற்க வேண்டும்.

 

வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையான” ஐக்கிய இலங்கைக்குள் இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வு “என்பதனை தமது இலக்காக கொண்டு செயற்பட வேண்டும் என மேலும் அவர்களுடைய ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin