செம்மணி மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி 17ஆம் திகதி யாழில் மாபெரும் போராட்டம்!

செம்மணி மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி 17ஆம் திகதி யாழில் மாபெரும் போராட்டம்!

“உள்நாட்டு விசாரணையில் எங்களுக்கு நம்பிக்கையில்லை; சர்வதேசம் தலையிட்டால் மாத்திரமே நீதி கிடைக்கும்” – மனுவல் உதயச்சந்திரா

செம்மணி மனித புதைகுழியில் இதுவரை 583 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ள நிலையில், குறித்த புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி எதிர்வரும் நவம்பர் 17ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த போராட்டத்திற்கு மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், அரசியல் பிரதிநிதிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து ஆதரவு வழங்க வேண்டும் என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடும் குடும்பங்களின் சங்கத் தலைவி மனுவல் உதயச்சந்திரா அழைப்பு விடுத்துள்ளார்.

மன்னாரில் இன்று (11) புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

செம்மணி மனித புதைகுழி தொடர்பாக பேராசிரியர் ஒருவர் சமர்ப்பித்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள கருத்துக்கள் கண்டிக்கத்தக்கவை எனத் தெரிவித்த அவர், புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்பில் வெளியிடப்படும் விளக்கங்கள் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துவதாகவும் குறிப்பிட்டார்.

ஆடைகள் இன்றி, கயிறுகளால் கட்டப்பட்ட நிலையில், உடல்களில் தாக்குதலுக்கான அடையாளங்களுடன் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளமை தொடர்பில் கேள்வி எழுப்பிய அவர், இவை நோயால் உயிரிழந்தவர்களின் உடல்கள் எனக் கூறப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்தார்.

மேலும், காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவினர்கள் சுமார் 17 ஆயிரம் பேருக்கு என்ன நடந்தது என்பது இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை எனவும், பல ஆண்டுகளாக வீதிகளில் நின்று போராடியும் தமக்கு உரிய பதில் கிடைக்கவில்லை எனவும் அவர் வேதனை வெளியிட்டார்.

உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையில் தமக்கு நம்பிக்கை இல்லை எனத் தெரிவித்த அவர், செம்மணி மனித புதைகுழி விவகாரத்தில் சர்வதேசத்தின் தலையீட்டுடன் சுயாதீனமான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

எதிர்வரும் 17ஆம் திகதி காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் அரியாலை தபால் கட்டை சந்தியிலிருந்து செம்மணி மனித புதைகுழி வரை நடைபவனியாகச் சென்று கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எனவே, நீதிக்காகவும் உண்மையை வெளிக்கொணரவும் முன்னெடுக்கப்படும் இந்தப் போராட்டத்தில் அனைத்து தரப்பினரும் கலந்துகொண்டு ஆதரவு வழங்க வேண்டும் என மனுவல் உதயச்சந்திரா மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Recommended For You

About the Author: admin