வடக்கிற்கும் விரிவடையும் மெட்ரோ பஸ் சேவை – யாழில் ஆரம்பம்!

வடக்கிற்கும் விரிவடையும் மெட்ரோ பஸ் சேவை – யாழ்ப்பாணத்தில் பரீட்சார்த்த ஓட்டம் ஆரம்பம்!

கொழும்பில் ஆரம்பிக்கப்பட்ட நவீன பொதுப் போக்குவரத்து சேவையின் அடுத்தகட்டமாக, யாழ்ப்பாணத்திலும் மெட்ரோ பஸ் சேவையை ஆரம்பிப்பதற்கான ஆரம்பகட்ட பரீட்சார்த்த ஓட்டம் நேற்று (நவம்பர் 10) முன்னெடுக்கப்பட்டது.

நாட்டின் பொதுப் போக்குவரத்து சேவையை நவீனமயப்படுத்தி, மக்களுக்கு பாதுகாப்பான, சௌகரியமான மற்றும் வினைத்திறனான போக்குவரத்து அனுபவத்தை வழங்கும் நோக்கில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

 

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேனவின் பங்கேற்புடன் இடம்பெற்ற இந்தப் பரீட்சார்த்த ஓட்டத்தின்போது, மெட்ரோ பஸ் சேவைக்குப் பொருத்தமான வீதிகளை அடையாளம் காணுதல், பேருந்து தரிப்பிடங்களைத் தீர்மானித்தல், தேவையான தொழில்நுட்ப வசதிகள் மற்றும் தனியார் வாகனங்களை நிறுத்துவதற்கான இடங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.

 

2026ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் 10 பேருந்துகளுடன் முன்னோடித் திட்டமாக ஆரம்பிக்கப்பட்ட மெட்ரோ பஸ் சேவை, தற்போது மேல் மாகாணத்தின் மூன்று மாவட்டங்களில் ஏழு வழித்தடங்களில் 122 பேருந்துகளுடன் இயங்கி வருகிறது.

 

கொழும்புக்கு வெளியே இச்சேவையை விரிவுபடுத்தும் அடுத்தகட்ட நடவடிக்கையாக யாழ்ப்பாணம் மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து காலி மாவட்டத்திற்கும் இச்சேவையை விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

 

தனியார் வாகனப் பயன்பாட்டைக் குறைத்து, தரமான பொதுப் போக்குவரத்து சேவையை அதிகளவிலான மக்கள் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

 

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை மெட்ரோ டிரான்சிட் தனியார் நிறுவனத்தினால் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

 

யாழ்ப்பாணத்திலும் மெட்ரோ பஸ் சேவை நடைமுறைக்கு வருவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை வடக்கு மக்களிடையே புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Recommended For You

About the Author: admin