நடிகர் விஜய்யை அவரது ரசிகர்கள் தளபதி என்று அன்புடன் அழைத்து வரும் நிலையில், அதற்கான அர்த்தம் என்ன என்பது பற்றி விஜய் சுவாரசியமாக விளக்கம் அளித்துள்ளார். அவரது பேச்சு வைரலாகி வருகிறது.
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் 17 ஆம் தேதி வெளியான லியோ திரைப்படம் ரூ. 540 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றி நடைபோடுகிறது. இந்நிலையில் லியோ படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் இன்று சென்னை நேரு உள் விளையாட்டரங்கத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் விஜய், த்ரிஷா, லோகேஷ் கனகராஜ், அர்ஜுன், இயக்குனர் மிஷ்கின், மன்சூர் அலி கான் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். விழாவில் கடைசியாக நடிகர் விஜய் பேசினார். தளபதி என்று ரசிகர்கள் தன்னை அழைப்பதற்கான அர்த்தத்தையும் விளக்கினார் விஜய்.
விழாவில் அவர் பேசியதாவது- மக்கள் திலகம்னா ஒருத்தர்தான், புரட்சி கலைஞர் விஜய்காந்த்னா ஒருத்தர்தான், உலகநாயகன்னா ஒருத்தர்தான், சூப்பர்ஸ்டார்னா ஒருத்தர்தான், தலனா அது ஒருத்தர்தான்.
அப்படி தளபதி.
தளபதினா என்னனு உங்களுக்கு தெரியும்ல. உங்களுக்கு கீழ வேலை செய்ற தளபதி நான். மக்களாகிய நீங்கள்தான் மன்னர். நான் உங்களுக்கு உதவியாக இருக்கும் தளபதி. நீங்கள் ஆணையிடுங்கள் நான் செய்து முடிக்கிறேன். என்று பேசினார்.