பீகார் மாநிலத்தின் சுதந்திரப் போராட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர் பிரஜ் கிஷோர் ரவி. 1989 ஆம் ஆண்டு பேட்ச்சை சேர்ந்த தமிழ்நாடு கேடர் ஐபிஎஸ் அதிகாரியான B.K.ரவி, தமிழ்நாடு காவல்துறையில் 34 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
தமிழ்நாடு மாநில சட்டம் ஒழுங்கு டிஜிபிக்கான போட்டியில் இடம்பெற்றிருந்தார். மாநில டிஜிபிக்கான ரேஸில் முதலிடத்தில் சஞ்சய் அரோராவும், 2ஆம் இடத்தில் B.K. ரவியும் இடம்பெற்றிருந்தனர்.
இந்நிலையில் அவருக்கு மின்சார வாரிய லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி பதவி ஒதுக்கப்பட்டது. கடந்தாண்டு தீயணைப்புத் துறை டிஜிபியாக பணியாற்றி வந்த B.K.ரவியை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது. இத்தகைய சூழலில், பதவிக்காலம் முடிவடைய 3 மாதங்கள் இருந்த போதிலும் திடீரென விருப்ப ஓய்வு கேட்டு பெற்றார்.
இந்த நிலையில், பி.கே. ரவி காங்கிரஸ் கட்சியில் இணைந்து மக்களவைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜனே கார்கே முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக கட்சியில் இணைய உள்ளார்.
ஒருவேளை தேர்தலில் அவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டால் பீகார் மாநிலத்தில் இருந்து போட்டியிடலாம் எனவும் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் இருந்து அரசியலில் சேர உள்ள இரண்டாவது டிஜிபி இவராவார். ஏற்கனவே முன்னாள் டிஜிபி கருணாசாகர் பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியில் சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.