சுவிட்சர்லாந்தில் கோர தொழில் விபத்து – 16 வயது தமிழ் மாணவன் உயிரிழப்பு!
சுவிட்சர்லாந்தின் ஆர்காவ் (Aargau) மாநிலம், லெய்ப்ஸ்டாட் (Leibstadt) பகுதியில் இடம்பெற்ற கோரமான தொழில் விபத்தில் 16 வயதுடைய தமிழ் மாணவன் ஜேடன் சுதாகரன் உயிரிழந்துள்ளார்.
கடந்த நவம்பர் 11ஆம் திகதி புதன்கிழமை காலை, மரப்பொருள் உற்பத்தி நிறுவனமொன்றில் தொழிற்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாரம் தூக்கும் இயந்திரத்தை (Forklift) பயன்படுத்தி பணியில் ஈடுபட்டிருந்தபோது, அந்த இயந்திரம் இளைஞர் மீது கவிழ்ந்ததாக ஆரம்பகட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உடனடியாக மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம், பருத்தித்துறை, அல்வாய் வடமேற்கு, மாறாம்புலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஜேடன் சுதாகரன், ஆழ்வாப்பிள்ளை விக்னேஸ்வரலிங்கம் (விக்கி) அவர்களின் பேரன் எனக் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இவர் முதலாம் ஆண்டு தொழிற்பயிற்சியில் ஈடுபட்டு வந்த நிலையில், இளம் வயதிலேயே ஏற்பட்ட இந்த அகால மரணம் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆர்காவ் மாநிலக் காவல்துறையினரும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் அலுவலகமும் முன்னெடுத்து வருகின்றன.
இளம் வயதில் உயிரிழந்த ஜேடன் சுதாகரனின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்.

