உலகம் முழுவதும் முடங்கிய மைக்ரோசொப்ட் 365! 

உலகம் முழுவதும் முடங்கிய மைக்ரோசொப்ட் 365!

12 மணி நேரத்திற்கும் மேலாகத் தொடரும் தொழில்நுட்பத் தடை – திணறும் நிறுவனங்கள்!

உலகம் முழுவதும் மைக்ரோசொப்ட் 365 (Microsoft 365) சேவைகளில் ஏற்பட்டுள்ள பாரிய தொழில்நுட்பத் தடை 12 மணி நேரத்திற்கும் மேலாகத் தொடர்ந்து வரும் நிலையில்,

சேவையை வழமைக்குக் கொண்டுவர முன்னெடுத்த மாற்றங்கள் பலனளிக்கவில்லை என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

பயனர் நெரிசல் சமநிலையின்மையைச் சரிசெய்யவும், சேவையகங்களின் கொள்ளளவை அதிகரிக்க மெய்நிகர் இயந்திரங்களை (Virtual Machines) விரிவுபடுத்தவும்

மாற்று வழிமுறைகள் தீவிரமாக ஆராயப்பட்டு வருவதாக மைக்ரோசொப்ட் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது.

இந்தத் தொழில்நுட்பக் கோளாறால் உலகெங்கிலும் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் அரச திணைக்களங்கள் பயன்படுத்தும் Outlook, Teams, Copilot, OneDrive, SharePoint, Word, Excel மற்றும் PowerPoint ஆகிய சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

நேற்று இரவு 11.24 மணியளவில் அமெரிக்கப் பிராந்தியத்தில் எக்ஸ்சேஞ்ச் ஒன்லைன் மின்னஞ்சல் சேவையில் தொடங்கிய இந்தச் சிக்கல், பின்னர் உலகளாவிய தடையாக உருவெடுத்தது.

பல சேவையகங்கள் எதிர்பாராத விதமாகச் செயலிழந்ததால் ஏனைய கட்டமைப்புகளில் ஏற்பட்ட பாரிய அழுத்தமே இதற்குக் காரணம் என்றும்,

இது சைபர் தாக்குதல் அல்ல என்றும் மைக்ரோசொப்ட் தெளிவுபடுத்தியுள்ளது.

இலங்கை, இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், சிங்கப்பூர், அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உட்பட 70-க்கும் மேற்பட்ட நாடுகளில் கோடிக்கணக்கான பயனர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உச்சகட்டமாக அமெரிக்காவில் மாத்திரம் டவுன்டிடெக்டர் தளத்தில் 130,000-க்கும் மேற்பட்ட அவுட்லுக் முறைப்பாடுகள் பதிவாகியிருந்தன.

இது குறித்த மேலதிக விவரங்களை மைக்ரோசொப்ட் நிர்வாக மையத்தில் MO1550821 மற்றும் EX1550543 ஆகிய இலக்கங்களின் கீழ் பார்வையிட முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin