காலநிலை மாற்றத்தால் பிரான்ஸ் சொத்துக்களுக்குப் பெரும் அச்சுறுத்தல்! 1.2 கோடி வீடுகளுக்கு ஆபத்து

காலநிலை மாற்றத்தால் பிரான்ஸ் சொத்துக்களுக்குப் பெரும் அச்சுறுத்தல்! 1.2 கோடி வீடுகளுக்கு ஆபத்து

பிரான்ஸில் கடுமையான வறட்சி மற்றும் களிமண் மண்ணின் சுருங்கி விரியும் தன்மையால், நாட்டின் மொத்த வீடுகளில் 61.5 சதவீதமான 1.21 கோடி (12.1 மில்லியன்) வீடுகள் சேதமடையும் அபாயத்தில் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றத்தால் அதிகரித்து வரும் கடுமையான வறட்சி மற்றும் அதைத் தொடர்ந்து பெய்யும் கனமழையால், நிலத்தடியில் உள்ள களிமண் ‘ஸ்பாஞ்ச்’ (Sponge) போலச் சுருங்கி விரிவதால் வீடுகளின் அத்திவாரங்கள் மற்றும் சுவர்களில் பாரிய வெடிப்புகள் ஏற்படுகின்றன.

பிரான்ஸின் 55 சதவீத நிலப்பரப்பு தற்போது இந்த ‘களிமண் மண் அபாயப்’ (RGA) பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் இலையுதிர் மற்றும் குளிர்கால மழையினால் வெடிப்பு ஏற்பட்ட வீடுகளின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் எனவும் நிபுணர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

சேதமடைந்த வீடுகளின் அத்திவாரங்களைச் சீரமைக்கப் பெருந்தொகை செலவாகும் நிலையில், வீடுகளின் சொத்து மதிப்பும் கடுமையாகச் சரிந்து அவற்றை விற்க முடியாத இக்கட்டான சூழலுக்கு உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட வீடுகளுக்குக் காப்பீட்டு இழப்பீடு பெறுவதற்கு, குறிப்பிட்ட பகுதியை அரசாங்கம் ‘இயற்கை அனர்த்தப் பகுதியாக’ அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கடுமையான விதிமுறைகள் உள்ளதால் பலருக்கு நிவாரணம் கிடைப்பதில் சிக்கல் நிலவுகிறது.

2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் வறட்சி பாதிப்புக்காக விண்ணப்பிக்கப்பட்ட 1,941 விண்ணப்பங்களில், வெறும் 107 விண்ணப்பங்களுக்கு மட்டுமே அரச அங்கீகாரம் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனைத் தடுப்பதற்காக பிரான்ஸ் அரசாங்கம் 30 மில்லியன் யூரோ நிதியுதவித் திட்டத்தை விரிவுபடுத்தியுள்ள போதிலும், இதுவரை மிகக் குறைவான வீட்டு உரிமையாளர்களே இதன் மூலம் பயனடைந்துள்ளனர்.

எனவே, தற்போதுள்ள காப்பீட்டு முறையை மாற்றி, ஒவ்வொரு வீட்டையும் தனித்தனியாக மதிப்பீடு செய்து இழப்பீடு வழங்கும் வகையில் தேசிய நிதியம் ஒன்றை உருவாக்க வேண்டும் எனப் பாதிக்கப்பட்டோர் சங்கம் (AUMF) வலியுறுத்தியுள்ளது.

Recommended For You

About the Author: admin