முல்லைத்தீவிலிருந்து கடலுக்குச் சென்ற மூன்று மீனவர்களில் ஒருவர் மீட்பு

முல்லைத்தீவிலிருந்து கடலுக்குச் சென்ற மூன்று மீனவர்களில் ஒருவர் மீட்பு – கடலோரக் காவல்படையின் துரித நடவடிக்கை

முல்லைத்தீவிலிருந்து மீன்பிடிக்காகக் கடலுக்குச் சென்ற மூன்று மீனவர்களில் ஒருவர் கடலில் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

2026 ஒக்டோபர் 26ஆம் திகதி மீன்பிடி நடவடிக்கைக்காகப் புறப்பட்டுச் சென்ற மூன்று மீனவர்களில், மன்னாரைப் பிறப்பிடமாகக் கொண்ட 47 வயதுடைய மீனவர் ஒருவர் கடலில் ஆபத்தான நிலையை எதிர்கொண்டுள்ளார்.

இதனையடுத்து, மற்றுமொரு இலங்கை மீன்பிடிப் படகின் உதவியுடன் அவர் ஆரம்பகட்டமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததும், கடலோரக் காவல்படையின் SLCGS Jayesagara கப்பல் திருகோணமலை துறைமுகத்திலிருந்து உடனடியாக மீட்பு நடவடிக்கைக்காகப் புறப்பட்டுள்ளது.

சுமார் 240 கடல் மைல்கள் (444 கிலோமீற்றர்) தொலைவில் அமைந்திருந்த சம்பவ இடத்தை நோக்கிச் சென்ற கப்பல், நவம்பர் 7ஆம் திகதி அதிகாலை 5.50 மணியளவில் மீட்கப்பட்ட மீனவரைப் பொறுப்பேற்றுக் கொண்டது.

கப்பலில் வைத்து அவருக்குத் தேவையான மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டதுடன், பயணம் முழுவதும் அவரது உடல்நிலை தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, நவம்பர் 8ஆம் திகதி திருகோணமலை துறைமுகத்தைச் சென்றடைந்த கப்பலிலிருந்து மீனவர் பாதுகாப்பாகக் கரைக்குக் கொண்டுவரப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை கடற்படை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர், மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்கள் தொடர்பில் தொடர்ச்சியாகக் கவனம் செலுத்தி வருவதுடன், கடலில் ஆபத்தான நிலைகளை எதிர்கொள்ளும் மீனவர்களுக்கு உரிய உதவிகளை வழங்குவதன் அவசியத்தையும் வலியுறுத்தி வருகின்றார்.

மீனவர்களின் உயிர்ப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும், அவசரகாலங்களில் விரைவான மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் அரசாங்கம் மற்றும் சம்பந்தப்பட்ட கடல்சார் பாதுகாப்புத் தரப்பினரின் ஒருங்கிணைந்த செயற்பாடுகள் மிகவும் அவசியமானவை என்பதை இச்சம்பவம் மீண்டும் வலியுறுத்துகின்றது.

கடலுக்குச் சென்று நாட்டின் பொருளாதாரத்திற்கும் உணவுப் பாதுகாப்பிற்கும் பங்களிக்கும் ஒவ்வொரு மீனவரினதும் உயிரைப் பாதுகாப்பது எமது முதன்மையான பொறுப்பாகும்.

Recommended For You

About the Author: admin