பிரான்சில் நவம்பர் 10-ல் வெடிக்கும் மாபெரும் வேலை நிறுத்த போராட்டம்!!
அரசாங்கத்தின் ‘அலட்சியப் போக்கிற்கு’ பதிலடி:
நவம்பர் 10-ல் கல்வித்துறையில் வெடிக்கிறது மாபெரும் வேலைநிறுத்தம்!
பிரான்ஸ் அரசாங்கத்தின் அலட்சியப் போக்கைக் கடுமையாகக் கண்டித்து, தேசியக் கல்வித்துறையைச் சேர்ந்த அனைத்துப் பணியாளர்களும் நாளை செவ்வாய்க்கிழமை (நவம்பர் 10 ஆம் திகதி) மீண்டும் ஒரு மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதிக்கவுள்ளனர்.
வாழ்க்கைச் செலவின உயர்வைக் கண்டித்தும், இளைஞர்களின் நலனைக் காக்கவும் கடந்த சனிக்கிழமை
(நவம்பர் 07) நாடு முழுவதும் நடைபெற்ற மாபெரும் போராட்டத்தில் சுமார் ஒன்றரை இலட்சம் பேர் கலந்துகொண்டதாக உள்நாட்டு விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேவேளை, நாடு முழுவதும் இரண்டரை இலட்சம் பேர் வரை வீதிக்கு வந்து தமது எதிர்ப்பைப் பதிவு செய்ததாக இளைஞர் தொழிற்சங்கங்கள் பெருமிதம் கொள்கின்றன. தலைநகர் பாரிஸில் மட்டும் சுமார் 75,000 பேர் அணிதிரண்டிருந்தனர்.
கடந்த வியாழக்கிழமை ஊதிய உயர்வுக்காக நடைபெற்ற மாபெரும் போராட்டத்தோடு ஒப்பிடுகையில் சனிக்கிழமை கூட்ட நெரிசல் சற்று குறைந்திருந்தாலும்,
மக்களின் போராட்டக் கனல் இன்னும் அணையவில்லை. “தற்போது சமூகப் போராட்டங்கள் வலுவான நிலையில் உள்ளன; அரசாங்கம் பலவீனமடைந்து பின்வாங்கத் தொடங்கியுள்ளது.
எனவே, போராட்டத்தின் வீரியத்தை அதிகரித்து அரசாங்கத்திற்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுக்க இதுவே மிகச் சரியான தருணம்” என மாணவர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டாகச் சூளுரைத்துள்ளது.
பள்ளிக் கட்டடங்களின் மோசமான நிலை, உயர்கல்விக்கான வாய்ப்புகள் மற்றும் போதிய வளங்கள் இன்மை குறித்து அரசாங்கம் அளித்த ஆரம்பக்கட்டப் பதில்கள் எவையுமே போதுமானதாக இல்லை என மாணவர் அமைப்புகள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளன.
மேலும், பொதுத்துறை மற்றும் தனியார் துறை ஊழியர்களிடையே திட்டமிட்டுப் பிளவை ஏற்படுத்த அரசாங்கம் சதி செய்வதாகத் தொழிற்சங்கங்கள் குற்றஞ்சாட்டுகின்றன.
ஊதியப் பிரச்சினை என்பது ஒட்டுமொத்த உழைக்கும் வர்க்கத்திற்கும் பொதுவானது என்றும், செல்வந்தர்களுக்குச் சாதகமான வரி விதிப்புகளும், நியாயமற்ற செல்வப் பகிர்வுமே இந்த நெருக்கடிக்கு மூலகாரணம் என்றும் ‘ஸ்னெஸ்-எப்.எஸ்.யு’ (Snes-FSU) தொழிற்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கிடையே, பிரதமர் செபஸ்தியான் லுகோர்னு (Sébastien Lecornu) அவர்கள் திங்கட்கிழமையன்று கூட்டியுள்ள ஊதியம் மற்றும் வாங்கும் திறன் குறித்த முக்கிய சமூக மாநாட்டில்,
கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறை உள்ளிட்ட பொதுத்துறை ஊழியர்கள் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
அரசாங்கத்தின் இந்தச் செயல் கல்வித்துறையினர் மீதான அவர்களின் அப்பட்டமான அலட்சியத்தையே வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகத் தொழிற்சங்கங்கள் கொந்தளித்துள்ளன.
பொதுத்துறைத் தொழிற்சங்கங்களை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (நவம்பர் 13) மட்டுமே சந்தித்துப் பேசப் பிரதமர் தரப்பில் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளமை, போராடும் ஊழியர்கள் மத்தியில் நிலைமையை மேலும் சூடாக்கியுள்ளது

