முல்லைத்தீவு மாவட்ட அரச  வைத்தியசாலைக்கு புதிய அம்பியூலன்ஸ் வண்டி 

முல்லைத்தீவு மாவட்ட அரச  வைத்தியசாலைக்கு புதிய அம்பியூலன்ஸ் வண்டி

முல்லைத்தீவு மாவட்டத்தின் சுகாதாரச் சேவை, நோயாளர் போக்குவரத்து மற்றும் அவசரச் சிகிச்சைச் சேவைகளை மேலும் மேம்படுத்தும் நோக்கில், முல்லைத்தீவு மாவட்ட அரச வைத்தியசாலைக்கான புதிய அம்பியூலன்ஸ் வண்டி ஒன்று நேற்று (30) உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

 

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவால் இந்த வாகனம் கையளிக்கப்பட்டது.

 

இந்த அம்பியூலன்ஸ் வண்டியானது அதிநவீன வசதிகளைக் கொண்ட “நிசான்” ரக வாகனமாகும். இது ஆரம்பத்தில் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவிற்காக (PSD) ஒதுக்கப்பட்டிருந்த போதிலும், அது சார்ந்த பணிகளுக்காகப் பயன்படுத்தப்படாமல் இருந்துள்ளது.

 

நாட்டின் சுகாதாரச் சேவையின் அவசியத் தேவையைக் கருத்திற்கொண்டு, இந்த வாகனத்தை வீணடிக்காமல் சுகாதார அமைச்சிடம் ஒப்படைக்க ஜனாதிபதி செயலகம் (Presidential Secretariat) நடவடிக்கை எடுத்திருந்தது.

 

இதனடிப்படையில், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் நோயாளர் பராமரிப்புச் சேவைகளை வலுப்படுத்தும் நோக்கில், இவ்வாகனம் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டு, நேற்று முல்லைத்தீவு மாவட்டத்தின் பயன்பாட்டிற்காக அனுப்பி வைக்கப்பட்டது.

 

இந்த விசேட நிகழ்வில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் மேலதிக செயலாளர் டொக்டர் குமார விக்ரமசிங்க, பிரதிப் பணிப்பாளர் நாயகம் (விநியோகம்/ தளவாடங்கள்) எச்.எம்.என். டினிபிரிய ஹேரத், போக்குவரத்துப் பிரிவுப் பணிப்பாளர் முதித விமலசேன உட்பட அமைச்சின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

 

இந்த புதிய அம்பியூலன்ஸ் வண்டியின் மூலம் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த பின்தங்கிய கிராமப்புற மக்கள் அவசரக் காலங்களில் மிக விரைவான மருத்துவப் போக்குவரத்துச் சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Recommended For You

About the Author: admin