ஈராக் அணி மீண்டும் வளைகுடா மூத்த வீரர்கள் கிண்ணத்தைத் தட்டிச் சென்றது!

ஈராக் அணி மீண்டும் வளைகுடா மூத்த வீரர்கள் கிண்ணத்தைத் தட்டிச் சென்றது!

கத்தாரில் நடைபெற்ற இரண்டாவது வளைகுடா மூத்த வீரர்கள் கால்பந்து கிண்ணத் தொடரில் (Gulf Veterans Cup Qatar 2026) ஈராக் அணி தொடர்ந்து இரண்டாவது முறையாகச் சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

தோஹாவில் உள்ள சவுத் பின் அப்துல் ரஹ்மான் விளையாட்டரங்கில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஈராக் மற்றும் சவூதி அரேபியா அணிகள் மோதின. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் இரு அணிகளும் கோல் எதனையும் பெறாததால், வெற்றியாளரைத் தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் நடத்தப்பட்டது. இதில் 4–3 என்ற கோல் கணக்கில் சவூதி அரேபியாவை வீழ்த்திய ஈராக் அணி கிண்ணத்தைத் தனதாக்கியது.

 

இதனிடையே, தொடரின் சிறந்த வீரருக்கான விருதை ஈராக் அணியின் கல்தூன் இப்ராஹிம் பெற்றுக்கொண்டார். சிறந்த கோல் காப்பாளருக்கான விருது நூஹ் சப்ரிக்கும், அதிக கோல்கள் அடித்த வீரருக்கான விருது ஐந்து கோல்களைப் பெற்ற ஹம்மாதி அஹ்மத்துக்கும் வழங்கப்பட்டது.

 

அரையிறுதிப் போட்டியில் போட்டியை நடத்திய கத்தார் அணியை 4–0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஈராக் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. மற்றொரு அரையிறுதியில் பஹ்ரைனை பெனால்டி ஷூட் அவுட்டில் 5–4 என்ற கணக்கில் வீழ்த்தி சவூதி அரேபியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

 

வளைகுடா கால்பந்து சம்மேளனத்தின் ஏற்பாட்டில், கத்தாரின் உள்ளூர் ஏற்பாட்டுக் குழுவுடன் இணைந்து நடத்தப்பட்ட இத்தொடரில் வளைகுடா பிராந்தியத்தைச் சேர்ந்த எட்டு நாடுகளின் முன்னாள் நட்சத்திர கால்பந்து வீரர்கள் பங்கேற்றனர்.

 

இந்தத் தொடரின் இறுதிப் போட்டியுடன் கத்தார் 2026 வளைகுடா மூத்த வீரர்கள் கிண்ணப் போட்டிகள் நிறைவடைந்துள்ளன.

 

தொடர்ந்து, கத்தாரில் எதிர்வரும் நவம்பர் 19ஆம் திகதி முதல் டிசம்பர் 13ஆம் திகதி வரை FIFA U-17 உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடர் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin