23 ஆண்டுகள் கால்பந்து உலகில் கொடிகட்டி பறந்த ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஓய்வு

23 ஆண்டுகள் கால்பந்து உலகில் கொடிகட்டி பறந்த ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஓய்வு – ரசிகர்கள் பெரும் சோகத்தில்

போர்த்துகல் தேசிய கால்பந்து அணிக்காக 23 ஆண்டுகள் விளையாடிய கிறிஸ்டியானோ ரொனால்டோ, சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இன்று வியாழக்கிழமை வெளியிட்ட காணொளிச் செய்தியில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சர்வதேச கால்பந்தில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையையும், அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் ரொனால்டோ தக்கவைத்துள்ளார். போர்த்துகல் அணிக்காக 234 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 146 கோல்களைப் பதிவு செய்துள்ளார்.

 

2016ஆம் ஆண்டு ஐரோப்பியக் கிண்ணத்தையும், UEFA நேஷன்ஸ் லீக் பட்டங்களையும் வென்ற போர்த்துகல் அணியில் ரொனால்டோ முக்கிய பங்காற்றினார். 2003ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் தேசிய அணிக்காக அறிமுகமான அவர், அணியின் தலைவராகவும் செயல்பட்டார்.

 

தனது ஓய்வு அறிவிப்பில், அணியின் ஏழாம் இலக்கச் சீருடையை ஒப்படைக்கும் தருணம் வந்துவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த முடிவு எளிதானதல்ல என்றும், அது வெறும் சிந்தனையால் மட்டுமல்ல, உணர்வுகளாலும் எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

தேசிய அணியுடனான பயணத்தை நினைவுகூர்ந்த ரொனால்டோ, கோல்கள், சாதனைகள் மற்றும் கிண்ணங்களை மட்டுமல்லாது, தன்னுடன் பயணித்த மக்களையும் நினைவுகூர்வதாகக் கூறியுள்ளார். அணித்தோழர்கள், பயிற்றுவிப்பாளர்கள், ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.

 

மடெய்ராவில் இருந்து தொடங்கிய தனது பயணத்தில், உலகின் சிறந்த வீரராக வேண்டும் என்ற இலக்குடன் உழைத்ததாகக் குறிப்பிட்ட ரொனால்டோ, போர்த்துகல் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பே தனது மிகப்பெரிய வெற்றி எனத் தெரிவித்துள்ளார்.

 

கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ஓய்வு செய்தியை அறிந்து கால்பந்து ரசிகர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். அடுத்த பிபா உலக கிண்ணத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடுவார் என்றே ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது தமது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.

 

தேசிய அணியில் இருந்து கிறிஸ்டியானோ ரொனால்டோ விலகினாலும் அவர் கிளப் போட்டிகளில் விளையாட உள்ளதாகவும் தகவல்கள் வௌியாகியுள்ளன.

Recommended For You

About the Author: admin