2026 உலக தடகள விருதுக்கு ருமேஷ் தரங்கவின் பெயர் பரிந்துரை

உலகின் முதல்நிலை ஈட்டி எறிதல் சம்பியனான இலங்கையின் ருமேஷ் தரங்க பத்திரகே, 2026 ஆம் ஆண்டுக்கான உலகின் சிறந்த தடகள வீரர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

இந்த ஆண்டில் சர்வதேச அரங்கில் சோபித்ததை அடுத்தே அவர் இந்த விருதுக்கான போட்டியில் இடம்பெற்றுள்ளார்.

உலக தடகள அமைப்பு அறிவித்திருக்கும் விருதுக்கான 10 பேர் கொண்ட பரிந்துரையாளர் பட்டியலிலேயே தரங்க இடம்பெற்றுள்ளார். இந்த விருது விழா எதிர்வரும் நவம்பர் 29 ஆம் திகதி மொனாகோவில் இடம்பெறவுள்ளது.

இந்த 10 பரிந்துரையாளர்கள், உலக தடகள அமைப்பின் இரண்டு பிரதிநிதிகள் மற்றும் ஆறு பிராந்திய சங்கங்கள் ஒவ்வொன்றிலிருந்தும் தலா ஒரு பிரதிநிதி என எட்டு நிபுணர்களைக் கொண்ட குழுவினால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

வெற்றியாளர் நான்கு தரப்பினரின் வாக்களிப்பு முறையின் மூலம் தீர்மானிக்கப்படும். ஒவ்வொரு வாக்களிப்பு குழுவும் மொத்த வாக்குகளில் 25 வீத பங்களிப்பை வழங்கும்.

இந்தக் குழுக்களில் உலக தடகள அமைப்பின் ரசிகர்கள், 2026ஆம் ஆண்டில் உலக தடகள போட்டிகளில் பங்கேற்ற வீரர்கள், அங்கீகாரம் பெற்ற ஊடகங்கள் உட்பட உலக தடகள அமைப்பின் பரந்த உறுப்பினர் சமூகத்தினர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த கௌரவமிக்க விருதுக்காக இலங்கை சார்பில் பரிந்துரைக்கப்பட்ட முதல் வீரராக ருமேஷ் தரங்க பதிவாகியுள்ளார்.

தங்க இந்த ஆண்டில் டயமன்ட் லீக் இறுதிப் போட்டியில் தங்கம் வென்றதோடு அல்டிமேட் சம்பியன்சிப், பொதுநலவாய போட்டி மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் தங்கம் வென்றார்.

இந்த பருவத்தில் அதிக தூரம் எறிந்த வீரராக உள்ள தரங்க உலக ஈட்டி எறிதல் தரவரிசையில் முதல் இடத்திலும் உள்ளார்.

பரிந்துரைக்கப்பட்ட வீரர்கள் (ஆண்கள்)

கெனெத் பெட்னெர்க் (அமெரிக்கா), கிரிஷ்ட்ஜன் சே (ஸ்லோவேனியா), எண்டி டயஸ் ஹெர்னாண்ட்ஷி (இத்தாலி), அலிஷன் டோஸ் செண்டோஸ் (பிரேசில்), மொண்டோ டுப்ளண்டிஸ் (சுவீடன்), கொலென் கெபினாட்ஷிபி (பொட்ஸ்வானா), ஜோஷ் கெர் (பிரிட்டன்), ருமேஷ் தரங்க (இலங்கை), செபஸ்டியன் செவே (கென்யா), ஜகோபே தார்ப் (அமெரிக்கா)

Recommended For You

About the Author: admin