அரச ஊழியர்களுக்கு உத்தியோகபூர்வ மின்னஞ்சல் முகவரிகள் வழங்க அரசாங்கம் தீர்மானம்!
அரச சேவையின் டிஜிட்டல் மயமாக்கலை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், அனைத்து தகுதியான அரச ஊழியர்களுக்கும் உத்தியோகபூர்வ மின்னஞ்சல் முகவரிகள் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, இந்த நடவடிக்கை அரச நிறுவனங்களுக்கிடையிலான தொடர்பாடல் மற்றும் தரவு பரிமாற்றத்தை மேலும் திறம்பட மேற்கொள்ள உதவும் என கூறியுள்ளார்.
தற்போது பல அரச ஊழியர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரிகளை பயன்படுத்தி வருவதாகவும், புதிய திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உத்தியோகபூர்வ மின்னஞ்சல்கள் ஆவணங்கள் மற்றும் முக்கிய தகவல்களை பாதுகாப்பாக பரிமாறிக்கொள்ள உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், காணொளி மாநாடுகள் உள்ளிட்ட சேவைகளையும் எளிதாக மேற்கொள்ள இந்த முறைமை உதவும் எனக் கூறப்பட்டுள்ளதுடன், அரச சேவையின் முழுமையான டிஜிட்டல் மாற்றத்திற்கு இது முக்கிய பங்களிப்பாக அமையும் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

